பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராமு பெரிய மனிதனாக நாற்காலியிலே! கையில் உலக்கை போல தடிக்கம்பு. அது அவனால்தான் தூக்க முடியும். தலையில் தலைப்பாகை, கண்ணாடி... என்ன சந்தோஷம்!

'பூகோள ஸார்' புஸ்தகம் சிலேட்டுடன் சின்னப் பையன் மாதிரி மெதுவாக வருகிறார்.

"நாயே ஏன் 'லேட்'? இங்கே வா, இப்படி.

"போடு தடியாலே! ராஸ்கல், உனக்கு என்னமா இருக்கு? நீ பிரம்பு, நான் கம்பு. என்னாலேதான் தூக்க முடியும்."

பூகோள ஸார் அழறார்!

"போய் தலைகீழே நின்று படித்து ஒப்பித்துவிட்டு வீட்டிற்குப் போ..." ராமுக்கு என்ன சிரிப்பு!...

... பெரிய 'கிளாஸ்'. நல்ல வாத்தியார். பெரிய நாற்காலியில். நரைத்த தலை; சிரித்த முகம். ராமு அவர் மடியில் உட்கார்ந்திருக்கிறான். அவர் முதுகைத் தடவிக் கொண்டே, "இன்றைக்கு ஏன் லேட்? இப்படி வரலாமா? கெட்ட வழக்கம். இந்தா லட்டு. இந்தியாவின் தலைநகர்?"

"டில்லி."

"அதுதான், ஏன் பயப்படறே. நீ நல்ல பையனாச்சே. அந்தப் பூகோள ஸார் அந்தக் குழியிலே உதைபட்டுக் கொண்டு கிடக்கிறார் பார். பயப்படாதே. நான் இருக்கிறேனே..."

'பளீல்!'

"படிக்கச் சொன்னா, நாயே தூங்கறயா? எழுந்திரு."

'பளீல்!'

"ஐயோ இல்லை ஸார்! டில்லி மாநகர் ஸார்! ஐயோ! ஹும்ங்... ஹுங்..."


சுதந்திரச் சங்கு, 25.5.1934

82

மோட்சம்‌