பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராமனாதனின் கடிதம்

யாருக்கு எழுத... எல்லாருக்கும்தான்... நாளைக்கு இந்நேரம்... 'சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்' என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். 'சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது' அட முட்டாளே! உனக்குத்தான் அப்படி. இந்த இரண்டு கால் ஓநாய் இருக்கிறதே அதற்கு வெறி... சீச்சி! உன்னைப்பற்றி எனக்கென்ன! நாகரிகம், நாகரிகம், படிப்பு, அந்த இழவுதானே! என்னை என் இஷ்டப்படி செய்து கொள்ள உரிமையில்லையாம்! உன்னைக் கேட்டுக்கொண்டா நான் பிறந்தேன்? நான் துடிதுடித்துக் கொண்டு இருந்தேனே. அப்பொழுது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க உரிமையுண்டு போலிருக்கிறது... அட, ஓட்டைப்பானை வேதாந்தமே!... பறந்து குதிக்கலாமே! அடடே! விளக்கின் கிட்டப்போகாதே. அது நாகரிகம்! என்னைப்போல் தீய்ந்து போவாய்! இல்லை, இல்லை. நீதான் பட்டதாரி. அந்த விளக்குத்தான் கலாசாலை... விளக்கினால் உள்ளத்தைக் கருக்க முடியுமா! அதால் உன்னைத் தூக்குப் போட்டுக் கொள்ளச் செய்ய முடியுமா? அதற்குள் குதிக்காதே. எழுதி முடியட்டும். எண்ணை இருந்தால்தானே! நாளைக்கு அந்த எண்ணைக் கடைச் செட்டியின் மூஞ்சியைப் பார்க்கவேண்டும். திட்டினானே நாக்கில் நரம்பில்லாமல். பயலுக்கு வேண்டும்! கொஞ்சம் பொறுத்துக்கொள். நானும் அணைய வேண்டும். நீயும் அணைய வேண்டும். இரண்டு பேறும் குதித்துக்கொண்டு...

அம்மா இருந்தால்! இருந்தால் என்ன? 'படிக்க வச்சேன், பாட வச்சேன், பல்லுக்கருவான் பாதியிலே போனான்' என்று அழுவா. அப்பறம்? நல்லகாலமாய் முன்னாலேயே போய்ச் சேர்ந்தாள். பொதுவிலே நல்லவள்தான்... அப்பா இருக்கிறாரே, படிபடி என்று திட்டித் திட்டி இந்தக் கதிக்கு கொண்டுவந்தாரே... அன்றைக்குக் 'கிளாஸிற்கு' டோ க்கர் விட்டுவிட்டு கோயில் மா மரத்திலே அந்த ராமாநுஜம் பயலோட குசாலாய் மரக் குரங்கு விளையாடும் பொழுது அடிச்சாரே, பாவி! என்ன, எங்கள் வீட்டு உங்கள் வீட்டு அடியா... அந்தப் பயல் சுத்த மசளை, களிமண்தான். பள்ளிக் கூடத்தில் அவனுக்கு அந்த

புதுமைப்பித்தன் கதைகள்

83