பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாத்தியார் வேட்டை! படிப்பே வராது... படிச்சென்ன பண்ண... இந்தக் கதிதான். கொஞ்சச் செலவா? ரூ.2000 இருக்கும். ஏன், அதற்கு மேலே வட்டிக்காவது போட்டால் இந்தக் கதி வருமோ? இந்த மண் குதிரையை நம்பி கொண்டுவந்து கொட்டப் போகிறான் என்று எண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் விற்றுத் தொலைத்தார். அவர் என்ன செய்வார்? பாவம், பழைய காலத்து மனுஷ்யன். வேலை காய்த்துத் தொங்குகிறது, பறிக்க வேண்டியதுதான் பாக்கி என்று எண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் பாடு கொஞ்சம் கஷ்டந்தான். என்ன, இன்னும் கொஞ்ச நாளில் அவரும் சாம்பல்தானே. நான் பட்டதையும் கொஞ்சம் தெரிந்து கொண்டு வரட்டுமே. அவர் சாம்பல், நான் மண்... இந்த வயிற்றைத்தானே நாளைக்குக் கீறுவான். அதற்குள் எரிச்சல் எல்லாம் அவிந்து போயிருக்கும். ஓய் டாக்டரே! உமக்கு கை ஒன்றும் சுட்டுப் போகாது. குசாலாய்க் கீறும்... உம்! விஷம் இருக்கிறதா என்று பார்க்கவாக்கும். இந்த ஒண்ணாந்தரம் மணிக்கயிறு இருக்கிறபோது விஷம் வேறா? இரட்டை மேளமாட்டமாய்! தபேலா!... ஆமாம் அந்த ராஸ்கல்தான் ராமானுஜம். அமச்சியூர் டிராமாவிலே தபேலா அடிக்கிறதுதான் - இப்பொழுது வக்கீலாம் - கண்ட பலன். அந்தப் பயலை நேத்திக்கு 1 ரூ. கேட்டேன். குரங்கு, முகத்தை அப்படியே தூக்கிக் கொண்டு போய்விட்டது. அந்தக் காலத்திலே கணக்குக்கூட அவனுக்குப் போட்டுத் தொலைச்சிருக்கேன்! முதலில் டிக்கட் வேற என்னிடம் விற்க வந்தது... நீயேன் சொல்ல மாட்டாய்... உன் கையிலும் நாலு காசு இருந்தால் அப்படித்தான். அட முட்டாளே! உனக்கு வேலை பார்க்கத் திறமில்லாவிட்டால்? ஏறி இறங்கின படிக்கட்டு காலுக்குத் தெரியும். பட்ட இடி மனதிற்குத் தெரியும். தொழில் செய்ய மூளை இருக்கிறது. வெற்றிலைக் கடையாவது வைக்க காசு? மூட்டை தூக்க வேண்டும். ஜம்பத்தை எல்லாம் கட்டி வைத்துவிட்டு, டிரில் டிரில் என்று ஈ விரட்டின பலத்திலே - அதற்கு எத்தனை டிமிக்கி - எத்தனை சோற்றுப் பொட்டணம் தூக்க முடியும்! அவன் தான் அந்த மக்காலி, உன்னைக் குமாஸ்தாவாகப் பிடித்துவைக்க திட்டம் போட்டானே. பயலை முக்காலியில் கட்டி அடிக்க வேண்டும்! சீ! கண்ணில் கொசு விழுகிறது. சாகிற கழுதைக்குக் கண்ணில் கொசு விழுந்தால் மோசமோ!... பாரதியைப் பட்டினி போட்டுக் கொன்ற பயல்களல்லவா. அவனை மூட்டை தூக்கச் சொல்லக்கூடாது. நைந்துபோனவனைக் கொன்று விடுவதுதானே இயற்கை, உங்கள் ஓநாய் வேதாந்தம். அவனுக்குக் கவிதையாவது இருந்தது நீங்கள் இப்பொழுது பாரதியார் என்று பெருமையடித்துக்கொள்ள. எல்லாம் விதி, விதி. என்னைப் போல் எத்தனை பேர். அவர்களின் துயரத்தை நீக்கும் ஆகுதியாக நான். தற்கொலை இல்லை. தற்கொலை செய்பவன் கோழையாம்! நீ செய்துபார். ஒய்யாரமாக நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பேசுவதைப் பாரேன். அதற்கும் ஒரு பிசாசுத் துணிச்சல் வேண்டும். பட்டாளத்து ஸோல்ஜர் சாகப் போகிறது தெரியாமலா போகிறான். அது மட்டும் தற்கொலையல்ல, வீரம்! சமூகத்திற்கு... தியாகம்; தியாகம்.

84

ராமனாதனின் கடிதம்