பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உணர்ச்சியின் அடிமைகள்

ல்யாணமாகி இன்னும் மூன்று நாட்கள் கூட ஆகவில்லை. ஏன் - வெளியில் கட்டிய தோரணங்களே நன்றாக உலரவில்லையே?

அந்த வீட்டு மெத்தையில் ஓர் அறை. அதில் புத்தகத்தில் ஈடுபட்ட ஒரு வாலிபன்; அந்தக் கல்யாண மாப்பிள்ளைதான்!

ஏடுகள் புரண்டுகொண்டிருந்தன. கண்கள் களவு கண்டுகொண்டிருந்தன. மனம் சிருஷ்டித் தொழிலைக் கைக்கொண்டால் பிறகு எவ்விதம் இருக்கும்?

மேடைப்படிகளிலே 'சிலிங், சிலிங்' என்ற பாதரசம்; வாலிபன் முகத்தில் ஆவலின் பரபரப்பு அலைபோல் எழுந்தது.

காப்பிதான் வருகிறது!

ஆசை, காப்பியின் மேலா? அல்ல!

ஒரு பெண் - நாணமே உருவெடுத்த மாதிரி - ஒரு வெள்ளித் தம்ளரில் காப்பியைக் கொண்டு வைத்துவிட்டு, ஒதுங்கி வெளியே போக யத்தனித்தாள்.

அழகு எல்லாம் சாதாரணந்தான். ஐயோ அந்தக் கண்கள்!

"கண்ணா, எனக்கு ஒரு முத்தம்!" கண்களில் ஒரு மிரட்சி.

"என்ன கண்ணா?"

சற்றுத் தயக்கம். ஏதோ ஒரு மாதிரி உதட்டுடன் உதடு பொருந்திய சப்தம் வந்தது. இது முத்தமா? உயிர் இல்லை. இன்பம் ஏற்றும் மின்சாரம் இல்லை.

சுந்தரத்திற்கு - அவன்தான் - ஒரு பெருமூச்சு வந்தது. இவள் தனது கனவின் பெண் அல்ல - தகப்பனார் பார்த்துவைத்த பெண். எப்படியோ தன் வாழ்க்கையில் வந்து பின்னிக் கொண்டாள்.

இவனுடைய ஆவேசம் பொருந்திய முத்தம், "ஐயோ" என்ற எதிரொலியைத்தான் எழுப்பியது.

"கண்ணா எனக்கு ஒரு முத்தம்!"


புதுமைப்பித்தன் கதைகள்

89