பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீட்டிக்கொண்டு, "இதோ பிடித்துத் தந்திருக்கிறேன்! இதைவிடவா?" என்று சிரித்தான்.

கமலாவின் கண்களில் ஓர் அற்புத ஒளி! சுந்தரத்தை அப்படியே தூக்கி விழுங்கிவிடுவதுபோல் ஒரு முத்தத்துடன் அணைத்தாள். குழந்தை 'வீல்' என்று குரலிட்டுத் தான் இருப்பதைத் தெரிவித்தது.

உடனே குழந்தையைக் கையில் பிடுங்கி மார்பில் அணைத்துக் கொண்டு அவரைப் பார்த்தவண்ணம், "எனக்கு இரண்டு பாப்பா இருக்கே! என்னடி மீனு!" என்று குழந்தையுடன் அவன் மீது சாய்ந்தாள். மூவரும் ஒருவராயினர்.

இருபது வருஷம்!

சாயந்தரம்.

வெளி வராந்தாவில் ஒரு பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. மீனுவின் குழந்தை.

இருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள். நரைத்த தலை; தளர்ந்த உடல்.

கமலாப் பாட்டி, சுந்தரம் தாத்தாவுக்கு வெற்றிலை தட்டிக்கொண்டிருக்கிறாள்.

வெற்றிலைப் பொடியை வாயில் போட்டுக் கையைத் துடைத்து விட்டு, "கண்ணா ஒரு முத்தம்" என்று குழந்தையை நோக்கிக் கைகளை நீட்டினார்.

"மாத்தேன் போ!" என்று காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு சிரித்தது குழந்தை.

"தாத்தா கண்ணோ! பாட்டி கண்ணோ!" என்று குழந்தையை நோக்கிக் கமலம் கைகளை அசைத்தாள்.

"மாத்தேன் போ!" சிரிப்புத்தான்.

இருவரும் ஒத்துப் பேசியதுபோல் ஏகோபித்துக் குழந்தையை எடுக்கிறார்கள்.

சுந்தரம் தாத்தா, "மாத்தேன் போ" என்று திருப்பிக் கொண்ட கழுத்தில் முத்தமிடுகிறார். கமலம் மார்பில் முத்தமிடுகிறாள்.

இருவர் கண்களிலும் அதே ஒளி!

மணிக்கொடி, 8.71934

புதுமைப்பித்தன் கதைகள்

91