பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டிப் பார்க்க ஆசைப்பட்டு இரண்டு மூன்று மாணவர்கள் தொடருகிறார்கள். அந்தச் சிதம்பர ரகஸியம் லேசாகக் கிடைத்துவிடுமா? மூக்குத்தான் தட்டையாகிறது.

இன்று தான் மாணவர்கள் வெகு கோலாஹலமாக உடுத்தியிருக்கிறார்கள். அதில் இரண்டு மூன்று முழுத் துரைகளையும் (உடுப்புவரைதான்) காணலாம். ஒவ்வொருவர் கையிலும் கத்தைப் புஸ்தகங்கள். இதில் சிலர், 'எப்பொழுதும்போல் இருப்பேன் இன்னும் பராபரமே!" என்பவர் போல் கவலையற்ற உடையுடன் வந்திருக்கிறார்கள். இந்த ரகம் மாணவர்கள்தான் அதிகப் படிப்பு. சிலர் 'என்ன வரும்' என்ற தர்க்கம்; 'வந்தால் என்ன எழுதுவது' என்ற பிரசங்கம். சிலர் புரொபெஸர்களை வளைத்துக் கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைக்கெடியாரம். ஒரு மாணவன் பிக்-பென் (Big-Ben)னையே தூக்கிக்கொண்டு வந்து விட்டான். ஒவ்வொருவர் வசத்திலும் குறைந்தது இரண்டு பௌண்டன் பேனாக்கள்; சிலரிடம் ஒரு பெரிய ஸ்வான் இங்க் புட்டி. மாணவர்களிலும் சில அபூர்வ பிரகிருதிகள் உண்டு. அவை, டார்வின் கூற்றுக்கு உதாரணமாக, மோட்டுக் கிளைகளில் உட்கார்ந்து புஸ்தகத்தை ஆழமதியுடனே படிப்பதைக் காணலாம்.

நடேசன் கோஷ்டியும் அதோ வருகிறார்கள்.

கலாசாலை மணி.

பரீட்சை ஆரம்பமாகிவிட்டது!

சாயங்காலம் மணி ஐந்து; கலாசாலை மணியும், 'போர் முடிந்தது. இன்று போய் நாளை வா!' என்பது போல் தொனித்தது. ஒவ்வொரு ஹாலிலும், "ஸ்டாப் பிளீஸ்" என்று காவலிருந்த புரொபெஸர்கள் கூவினார்கள். அதையும் கவனிக்காமல் மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வார்த்தை அதிகமாக எழுதிவிட்டால் பாஸாகிவிடும் என்ற நம்பிக்கை, ஒரு பையனைப் பண்டிதர் இழுப்பிற்கும் விடாமல் எழுதச் செய்கிறது.

சிலர் தங்கள் நம்பர்களைப் போட மறந்துவிட்டு வெளியேறி விடுவார்கள். ரைட்டர் அய்யர், பொன்னுசமி முதலியோர் அவனைக் கண்டுபிடித்து நம்பரைப் போடச் செய்யுமுன் மூளை கலங்கிவிடும். இப்படி வெளியேறியவர் ஒருவர் இருவர் தாங்களே வந்து போட்டுவிட்டு, கலாசாலைத் தொழிலாளிகளின் வசைமொழி பெற்றுத் திரும்புவார்கள்.

நடேசன் கோஷ்டியும் வெளியே வந்தார்கள். ஆனால் உற்சாகமில்லை. ஒரு வேளை களைப்பாகவும் இருக்கலாம். "எல்லாம்

புதுமைப்பித்தன் கதைகள்

97