பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/11

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2. வாழ்க்கை

 சொ. விருத்தாசலம் என்பது புதுமைப்பித்தனின் இயற்பெயர் ஆகும்.

அவருடைய தந்தை சொக்கலிங்கம் பிள்ளை திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அவர் அந்நிய ஆட்சியில் தென் ஆற்காடு ஜில்லாவில் தாசில்தாராக உத்தியோகம் பார்த்தார். வேலையின் நிமித்தம் அவர்தம் மனைவி பர்வதத்தம்மாளுடன் ஊர் ஊராக மாறுதல் பெற்று வந்தார். அப்படி அவர் கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலியூரில் வசித்தபோதுதான் விருத்தாசலம் பிறந்தார்.

1906-ம் வருடம் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி அவர் பிறந்த நாள் ஆகும். விருத்தாசலம் என்பது சொக்கலிங்கம் பிள்ளையின் தந்தை பெயர். அதாவது, புதுமைப்பித்தனின் தாத்தா பெயர் ஆகும். தாத்தா பெயரைப் பேரனுக்கு இடவேண்டும் எனும் தமிழ்நாட்டு மரபின்படி அவருக்கு இந்தப் பெயர் வந்து சேர்ந்தது.

புதுமைப்பித்தனுக்கு எட்டு வயது ஆகும்போது அவருடைய தாய் பர்வதத்தம்மாள் இறந்துபோனாள். தாயன்பைச் சின்னஞ்சிறு வயதிலேயே இழக்க வேண்டிய துர்பாக்கியம் அவருக்கு ஏற்பட்டது. இது ஒரு ஏக்கமாக அவர் மனசை உறுத்திக் கொண்டேயிருந்தது.

அவருடைய தந்தை சொக்கலிங்கம் பிள்ளை விரைவிலேயே மறுமணம் செய்து கொண்டார். மாற்றாந்தாயின் அன்பு வறுமையையும் கொடுமைகளையும் புதுமைப்பித்தன் அவருடைய வாழ்க்கையில் அனுபவிக்க நேர்ந்தது.

புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பு அவர் தந்தை வேலை பார்த்து வந்த தென்ஆற்காடு ஜில்லாவில்தான் ஆரம்பமாயிற்று. அவர் தந்தை உத்தியோக ரீதியில் மாற்றங்கள் பெற்று ஊர் ஊராகச் சென்று வசித்த காரணத்தினால், மகனின் படிப்பும் ஒரே ஊரில் சீராக வளர இயலாமல் இருந்தது. மேலும், அவர் செல்லப்பிள்ளையாக வளர்ந்ததால் படிப்பில் அவருக்கு உரிய நாட்டம் இல்லை. பள்ளிக்கூடம் செல்வதில் காட்டிய ஆர்வத்தை விட ஊர் சுற்றுவதில்தான் அவர் அதிகமான உற்சாகம் கொண்டிருந்தார்.