பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 சொக்கலிங்கம் பிள்ளை உத்தியோகத்திலிருந்து ஒய்வுபெற்று 1918-ம் வருடம், தமது பூர்வீக ஊரான திருநெல்வேலிக்குக் குடியேறினார். தாமிரவர்ணி ஆற்றின் கரைமீதுள்ள வண்ணார் பேட்டை என்ற இடத்தில் வசிக்கலானார். அப்போது புதுமைப் பித்தனுக்குப் பன்னிரெண்டு வயது ஆகியிருந்தது.

அதற்குமேல் அவருடைய பள்ளிப் படிப்பும் ஒரு ஒழுங்கான போக்கிற்கு உள்ளாயிற்று. திருநெல்வேலி கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்றில் அவர் கல்வி கற்கலானார். ஆயினும் அவர் படிப்பில் அதிக அக்கறை காட்டவில்லை. பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்கு அவருக்கு அதிக வருடங்கள் தேவைப்பட்டன.

பின்னர் அவர் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் தனது மேல் படிப்பைத் துவங்கினார். அப்போதே அவர் இளமைப் பிராயத்தை எட்டியிருந்தார். கல்லூரிப் படிப்பில் அவர் காட்டிய ஆர்வத்தை விட, அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த ஆங்கில நாவல்கள் படிப்பதில் அவர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் புதிது புதிதான துப்பறியும் நாவல்களை அவர் விரும்பிப் படித்தார். இரவில் வெகுநேரம்வரை கண்விழித்து, எடுத்த புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டுத் தான் அவர் தூங்குவார்.

இந்த இயல்பினால் கல்லூரிப் படிப்பையும் அவர் சீக்கிரம் முடிக்க இயலாது போயிற்று. நாவல்கள் படிப்பதிலும் இதர இலக்கியங்கள் படிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்த புதுமைப்பித்தனுக்கு, நாமும் இதைப் போல் எல்லாம் எழுத வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே எழுந்தது. அவரோடு வந்து சேர்ந்த இலக்கிய நண்பர்களும் அவருக்கு உற்சாகம் அளித்து வந்தார்கள்.

புதுமைப்பித்தன் நிதானமாகவே கல்லூரிப் படிப்பை முடித்து பி.ஏ. பட்டம் பெற்றார். 1931-ம் வருடத்தில். அதற்குள் அவருக்கு இருபத்தைந்து வயதுக்குமேல் ஆகிவிட்டது.

அந்தக் காலத்தில், மத்தியதர வர்க்கக் குடும்பத் தலைவர்க்ளின் லட்சியம் தங்கள் பையன்கள் படித்து பாஸ் பண்ணி அரசாங்க உத்தியோகம் பார்க்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதிலும், தாசில்தார் வேலை தான் பெரும்பாலோரின் லட்சியமாகத் திகழ்ந்தது.

புதுமைப்பித்தனின் தந்தை சொக்கலிங்கம் பிள்ளையும் அவ்வாறே கருதியிருந்தார். ஆனால் மகன் கல்லூரிப் படிப்பை இருபத்தைந்து வயதுக்குள் பூர்த்தி செய்யாது போனதால், அரசாங்க உத்தியோகம் கிடைக்க வழி இல்லாது போய்விட்டது.