பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/20

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பணியாற்றியது என்றே சொல்ல வேண்டும். அதன்மூலம் அந்தப் பிரசுரலாயமும் பிரசித்தி பெற்றது.

புதுமைப்பித்தனின் பெயர் பிரபலம் அடைந்துவந்த போதிலும் அவருடைய வாழ்க்கை வசதிகள் உயர்ந்துவிடவில்லை. ‘தினமணி’ நாளிதழில் கிடைத்துவந்த சம்பளம் அவருடைய வாழ்க்கைச் செலவுகளுக்குப் போதுமானதாக இல்லை. பற்றாக் குறை பட்ஜெட்டுடன் அவர் குடும்ப வாழ்க்கை திணறிக் கொண்டிருந்தது. பத்திரிகையில் வேலையும் நிறைய இருந்தது.

ஆங்கிலத்தில் வருகிற செய்திகளைத் தமிழாக்குகிற வேலைதான். ‘வானத்தை அளக்கும் கற்பனைத் திறமையும்’ படைப்பாற்றலும் பெற்றிருந்த அவருக்குத் தினந்தோறும் செய்திகளை மொழி பெயர்த்துத் தள்ளுகிற வேலை உவப்பானதாக இருந்ததில்லை. ஆயினும், மாதம் தோறும் நிரந்தரமான ஒரு வருவாய் கிடைக்கிறதே என்றுதான் அவர் நாளிதழ் வேலையில் இருந்தார். உண்மையான இலக்கிய வாதியின் மனப்பண்பையும், அவன் வாழ்க்கையில் நிலை பெற்றிருக்கிற வறுமையையும் யதார்த்தமாகச் சித்தரித்து அவர் எழுதியுள்ள ‘கடிதம்’, ‘ஒருநாள் கழிந்தது’ போன்ற அருமையான கதைகள் அவருடைய வாழ்க்கையின் பிரதிபலிப்புகளே ஆகும்.

புதுமைப்பித்தனின் இலக்கிய தாகமும் படைப்புத் திறனும் ஒரளவு செயல்படுவதற்கு, ‘தினமணி’ வருடம்தோறும் வெளியிட்டு வந்த ஆண்டு மலர்கள் உதவின. அவற்றை உருவாக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவரது மேற்பார்வையில் ஒவ்வொரு ஆண்டு மலரும் இணையற்ற இலக்கியத் தயாரிப்பாக வெளிவந்தது. ‘மணிக்கொடி’ எழுத்தாளர்களும் மற்றும் பல திறமையாளர்களும் எழுதிய கதை, கவிதை, கட்டுரைகள், ஒரங்க நாடகங்கள் முதலியன ‘தினமணி’ ஆண்டு மலர்களில் இடம் பெற்றன. புதுமைப் பித்தனின் சிறந்த கதைகள் சிலவும் அம்மலர்களுக்காக எழுதப் பட்டவைதான்.

‘தினமணி’யில் அவர் புத்தக மதிப்புரையும் எழுதினார். விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த முறையில், காரசாரமாக, மதிப்புரை எழுதித் தனது விமர்சனத் திறமையை நிரூபித்துக் கொண்டிருந்தார் அவர்.

புதுமைப்பித்தனின் தினமணி உத்தியோகம் சுமார் ஏழரை வருடங்கள் நீடித்தது. 1936 நடுவிலிருந்து 1943 இறுதிவரை அவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார்.