பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/28

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘மனிதனின் சிறுமைகளை, தப்பிதங்களை, அதில் அவன் நாடும் வெற்றியை, இலக்கியமாக சிருஷ்டிப்பதற்கு நல்ல கலைத்திறமையுடன் சிருஷ்டிப்பதற்கு வெகு காலம் சென்றது. வெள்ளி முளைத்தாற்போன்று சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை. இந்த எழுத்தாளர்களின் கற்பனைகளில் யாவும் இடம் பெறுகின்றன’ என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருக்கிறார்.

இத்தகைய எழுத்தாளர்களின் தலைவராக விளங்கினார் புதுமைப்பித்தன். புதுமை வேகம், வாழ்க்கையைப்பற்றிய கூர்மையான பார்வை, ஒப்பற்ற சிந்தனை நுட்பம், பாத்திரப் படைப்பு. கதை மாந்தரின் மன நிலை சித்திரிப்பு, தனது எண்ணங்களை அழுத்தமாகவும் புதிய முறையில் நயமாகவும் கூறும் துணிச்சல், அபாரமான தன்னம்பிக்கை தேர்ந்தெடுத்த கதைப் பொருள்கள், அவற்றுக்குக் கலை வடிவம் கொடுத்த நேர்த்தி, ஈடுஇணையில்லாத எழுத்தாற்றல், கையாண்ட நடை இவை காரணமாக அவரது கதைகள் தனித் தன்மையோடு விளங்கலாயின.

‘என் கதைகளின் தராதரத்தைப் பற்றி ‘எரிந்த கட்சி’ ‘எரியாத கட்சி’ ஆடுகிறார்கள். அதற்குக் காரணம், பலர் இலக்கியத்தில் இன்னது தான் சொல்லவேண்டும். இன்னது சொல்லக் கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல. சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர்நோக்கிப் பார்க்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கர வட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக் கட்டு கட்டுகிறோம். குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக் களறியையும், மனக் குரு பங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடமிருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போகப்போகிறது? மேலும், இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசைகளிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், சினிமா நடிகை சீதம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம்-இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்திரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர்முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கெளரவக் குறைச்சல் எதுவும் இல்லை’ இப்படி புதுமைப்பித்தன் என் கதைகளும் நானும் என்ற கட்டுரையில் தெளிவுபடுத்துகிறார்.