பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மரபுரீதியான, நிகழ்ச்சி அடுக்குகள் கொண்ட கதைகளைப் படித்துப் பழகிய வாசகர்களுக்கு புதுமைப்பித்தன் கதைகள் புரட்சிகரமாகவும் அதிர்ச்சிதரக்கூடியனவாகவும் இருந்தன. பெரும்பாலாருக்கு அவை புரியவுமில்லை. அவர் கையாண்ட நடையும் சாதாரண வாசகர்களை சிரமப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

இதைப்பற்றியும் புதுமைப்பித்தன் விளக்கம் கூறியிருக்கிறார்

‘கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு, தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது. அதைக் கையாண்ட நானும் கல்வி கற்றதன் விளைவாக பாஷைக்குப் புதிது. இதனால் பலர் நான் என்ன எழுதுகிறேன் என்பது பற்றிக் குழம்பினார்கள். சிலர் நீங்கள் எழுதுவது பொது ஜனங்களுக்குப் புரியாது என்று சொல்லி அனுதாபப் பட்டார்கள். அந்த முறையை நானும் சிறிது காலத்திற்குப் பிறகு கை விட்டு விட்டேன். காரணம், அது செளகரியக் குறைவுள்ள சாதனம் என்பதற்காக அல்ல, எனக்குப் பல முறைகளில் கதைகளைப் பின்னிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் அதைக் கைவிட்டு வேறு வழிகளைப் பின்பற்றினேன்.’

சிறுகதையில் புதுமைப்பித்தன் விதம்விதமான முறைகளில் சோதனைகளைச் செய்து வெற்றிகண்டவர். வாழ்க்கையை விசாலப் பார்வையோடு நோக்கி, பரந்த அளவில் ரகம் ரகமான பாத்திரங்களையும் கதைப் பொருள்களையும் கையாண்டு, மிக அருமையான கதைகளைப் படைத்திருப்பதில் புதுமைப்பித்தனுக்கு நிகரானவர் வேறு எவருகிலர்.

உலக இலக்கிய வளர்ச்சியைக் கூர்ந்து கவனித்து, சிறுகதை பற்றி ஆழ்ந்து சிந்தித்து, அவ்வழிகளில் தமிழ்நாட்டின் மக்கள் வாழ்க்கை, அவர்களுடைய மனநிலைகள் சம்பந்தமான புதுமைக் கதைகள் எழுதுவதில் அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார். அதனால், புதுமைப்பித்தன் கதைகளில் அநேகம் கதைகளே இல்லை; வெறும் 'ஸ்கெட்ச்சஸ் (Sketches). வாழ்க்கைபற்றிய சொற்சித்திரங்கள்தான்என்று விமர்சகர்கள் கருதுவது சகஜமாக இருக்கிறது. ஆனால், உலக இலக்கியப் போக்கின்படி அந்த விதமான எழுத்துக்களும் சிறு கதைகளே ஆகும்.

புதுமைப்பித்தன் நன்கு உணர்ந்து வேண்டுமென்றே கையாண்ட கதை உத்திகளில் இந்தப் போக்கும் அடங்கும். இதற்கு அவருடைய வார்த்தைகளே போதிய சான்று ஆகும்.