பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அவற்றில் கதைக்கு உரிய கதைப் பின்னல் கிடையா. அவற்றிற்கு ஆரம்பம், முடிவு என்ற நிலைகளும் பெரும்பான்மையாகக் கிடையா. மன அவசத்தின் உருவகம் கதைகள் என்பதை ஒப்புக் கொள்வதனால் அவை கதைகள் ஆகும். இம்மாதிரியான முறையை அனுஷ்டித்து மேல் நாட்டில் கதைகள் பிரசுரமாவது சகஜம். அந்த முறையை முதல் முதலாகத் தமிழில் இறக்குமதி செய்த பொறுப்பு அல்லது பொறுப் பின்மை என்னுடையதாகும்’ என்று அவர் கூறியிருக்கிறார். ‘என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஒரளவு காரணம் நான் புனைந்துகொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்த்திருக்கிறது என்பதை இப்போது அறிகிறேன். பிறகு நான் எடுத்தாளும் விவகாரங்கள். பலர் வெறுப்பது சிலர் விரும்புவது என்றும்’

‘பேரளவு துன்பத்தின் சாயை படியாது வெறும் உயிர்ப் பிண்டமாக வாழ்ந்த ஒரு வாலிபன், திடீர் என்று உலகத்தில் இயல்பாக இருந்துவரும் கொடுமைகளையும் அநீதிகளையும், சமூகத்தின் வக்கிர விசித்திரங்களையும் கண்டு, ஆவேசமாக, கண்டதைத் தனது மன இருட்டில் தோய்த்துச் சொல்லிய பேய்க்கனவுகளாகும்’ என்றும் புதுமைப்பித்தன் தனது கதைகளைக் குறிப்பிடுகிறார். சமுதாயத்தின் அவலங்களை முதன் முதலாகக் கண்ட ஒரு கலை உள்ளத்தின் வேதனைகளாக அவர் கதைகள் பல அமைந்திருக்கின்றன. மனிதரின் சிறுமைகளையும், வக்கிரங்களையும், வாழ்க்கை முரண்பாடுகளையும் கண்டு பரிகசிக்கிற, கிண்டல் பண்ணுகிற, மனசின் குரல்களாக அநேக கதைகள் காணப்படுகின்றன. ‘ஒரு தனிச் சம்பவம் அல்லது உணர்ச்சி அல்லது குணவிஸ்தாரம் அல்லது வர்ணனை எடுத்தாளப்படும் லிரிக் என்ற கவிதைப் பகுதி போல் சிறுகதை, சிறுகதையில் ரூபம் கதை எழுதுபவனின் மனோ தர்மத்தைப் பொறுத்தது’ என்று கூறும் புதுமைப்பித்தன், தனிப்பாடல் போன்ற லிரிக் ரீதியில் அநேகம் கதைகளை எழுதியுள்ளார். அவற்றுக்கெனச் சிறு சிறு வாக்கியங்களைக் கொண்ட தனி நடையையும் அவர் கையாண்டார்.

‘தெரு விளக்கு’ என்ற அவருடைய கதை இதற்கு நல்ல உதாரணமாக இருக்கிறது. தெரு விளக்கு ஒன்று நின்றது. அது தேவை இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ‘இனிமேல் விளக்கு அந்தப் பக்கத்திற்கு வேண்டாமாம். இதை எடுத்துவிட வேண்டுமாம்!