பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தேடிக் கொடுத்திருக்கிறார். நல்லவர். தர்மவான். ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலுக்குச் செல்வார். புதிய ஏற்பாட்டில் மனுஷகுமாரனின் திருவாக்குகள் எல்லாம் மனப்பாடம்’

அப்படிப்பட்டவர் தமது வீட்டுக் காம்பவுண்டில் நின்ற கொடுக்காப்புளி மரத்தின் பழங்களை ஒரு ஏழை விதவைக்கு நாள் குத்தகைக்கு விட்டுக் காசு பெற்று வந்தார். ஒருநாள் ஒரு பிச்சைகாரக் குழந்தை, கீழே விழுந்துகிடந்த பழங்களை ஆசையோடு பொறுக்கியது. ஒரு பழத்தை வாயில் வைத்தது. அதனால் கோபம் கொண்ட சுவாமிதாஸ் கையிலிருந்த தடிக்கம்பை குழந்தையின்மீது எறிந்தார். குழந்தை இறந்து விட்டது.

குழந்தையின் கூட வந்திருந்த தந்தை பெர்னாண்டஸ் அந்தக் கைத் தடியை எடுத்து, கிழவர் சுவர்மிதாஸ் மண்டையில் அடித்தான். அவரும் செத்துவிடுகிறார். பிறகு, பிச்சைக்காரனைக் கைது செய்தார்கள். கிழவர் அடித்தது எதிர்பாராத விபத்தாம். பெர்னாண்டஸ் கொலை காரனாம் என்று நியாயத்தீர்ப்பில் உள்ள முரண்பாட்டையும் சுட்டுகிறார் புதுமைப்பித்தன்.

‘நியாயம்’ என்ற கதையில், பெஞ்சு மாஜிஸ்திரேட் பதவி வகிக்கும் தேவஇரக்கம் நாடார் மதபக்தி கொண்டவர். பைபிளை இந்த உலகத்துக்கே சரியான ஒர் இந்தியன் பீனல் கோடாகவே மதித்தார். கோர்ட்டில் அவர்முன் ஒரு வழக்கு வந்தது. காயம்பட்ட குதிரையைக் கட்டி ஒட்டியதாக ஒரு வண்டிக்காரன் மீது கேஸ்.

குற்றத்தைக் கேட்டுத் தாங்கமுடியாத கோபம்கொண்ட தேவ இரக்கம் அவனை விசாரித்தார்.

‘வயித்துக்கொடுமை, இனிமேல் இப்படி நடக்காது சாமி. ஒரு தலை, தரும தொரைக மன்னிக்கணும்’ என்று அந்த ஏழை கெஞ்சினான்.

அவர் மனம் இரங்கவில்லை. ‘5 ரூபா அபராதம், தவறினால் ஒரு மாதம் சிறை’ என்று தீர்ப்புக் கூறினார்.

வண்டிக்காரன் ஒடிவந்து அவர் காலைப் பிடித்துக்கொண்டு, ‘தருமதொரைகளே இந்த ஒரு தடவை மன்னிக்கனும் புள்ளை குட்டி வயத்துலே அடிக்காதிங்க’ என்று அழுது அரற்றினான்.

அவர் அவனை விரட்டினார். கோர்ட் ஆர்டர்லி வண்டிக் காரனை இழுத்துக் கொண்டு போனான்.

அன்று இரவு தேவ இரக்கம் முழங்கால்படியிட்டு ஜெபம் செய்தார். வழக்கம்போல்."எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்;