பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/42

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வாழ்க்கை மனிதனை யந்திரமாக மாற்றிவிட்டபோதிலும், மனித உணர்ச்சி முற்றாக மழுங்கிப்போவதில்லை. சில சமயம் அது விழித்துக் கொண்டு, இவனும் மனிதன்தான் என்று உணர்த்தத் தவறுவதுமில்லை. இதை நிரூபிக்க மிஷின் யுகம் என்ற கதையை சிருஷ்டித்துள்ளார் புதுமைப்பித்தன். மிஷின் மாதிரிச் செயல் புரிந்துகொண்டிருக்கிறான் ஒட்டல் செர்வர். திடீரென்று, ‘ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது’ எனக் கூறி, அதை எடுத்துக் கொடுத்துத் தனது மனிதத் தன்மையைக் காட்டிக் கொள்கிறான்.

வாழ்க்கையின் அவலங்களையும், சமூகக் கொடுமைகளையும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் தாழ்ந்த நிலையில் வசிக்க நேரிட்டிருப்பவர்களை வஞ்சிப்பது, சிறுமைக்கும் சீரழிவுக்கும் உள்ளாக்குவது, அநியாயமாகத் தண்டிப்பது முதலிய செயல்கள் புரிவதையும், பொருளாதார ரீதியில் அடுத்தவனை ஏமாற்ற சதித்திட்டங்கள் தீட்டுவதையும் நாசகாரக் கும்பல் துன்பக்கேணி ஆகிய கதைகள் உணர்ச்சியோடு விவரிக்கின்றன.

அந்நாளைய கிராம சமூகத்தின் நியதிகளையும், கட்டுப்பாடுகளையும், சாதி உணர்வு ஆதிக்கத்தையும், பாதிக்கப்படுகிற தாழ்த்தப்பட்ட இனத்தினர் மதம் மாறிப் புது வாழ்வு பெற முயல்வதையும் நாசகாரக் கும்பல் உணர்த்துகிறது. மேல் தட்டு மக்களின் ஆக்கினைகளால் பாதிக்கப்படும் உழைப்பாளிகளின் துயரங்களையும், பிழைப்புக்காக இலங்கைக்குப் போய் அங்கே தேயிலைத் தோட்டங்களில் ஆண்களும் பெண்களும் அனுபவிக்கிற துயரங்களையும் சிறுமைகளையும் சீரழிவுகளையும் துன்பக் கேணி உருக்கமாகக் கூறுகிறது.

ஆண் பெண் உறவுகளையும், உணர்வுகளையும் அடிப்படையாக்கி புதுமைப்பித்தன் எழுதியுள்ள கதைகள் மரபு மீறலை அடி நாதமாகக் கொண்டிருக்கின்றன. விதவையை வைத்து அவரும் கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவர் பார்க்கிற கோணமே வேறு என்று தான் சொல்ல வேண்டும்.

சரசு விதவைப் பெண். வீட்டில் நடைபெறுகிற கல்யாண விசேஷமும் அது சம்பந்தப்பட்ட சடங்குகளும் அவளது நினைவுகளையும் உணர்ச்சிகளையும் கிளறிவிடுகின்றன. நெடுநாளாக அவளைக் கவனித்து வருகிற அன்பன் அவளுக்கு ஆறுதல் கூற முற்படுகிறான். அவளை மணந்து கொள்ளவும் முன் வருகிறான். அவள் அவன் செயலை தியாகத்தின் வெளிப்பாடாகக் கருதுகிறாள். அதை ஏற்க மறுக்கிறாள்.