பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/45

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இப்படி நிகழவும்கூடும் என்று நம்பவைக்கிற விதத்தில் கதையை வளர்த்திருப்பது ஆசிரியரின் திறமைக்கு வெற்றி ஆகும்.

அதேபோல, பிரம்ம ராஷஸ், செவ்வாய் தோஷம், வேதாளம் சொன்ன கதை, காளிகோயில், ஞானக் குகை, கபாடபுரம் ஆகிய கதைகளும் மனிதர்களின் பய உணர்வை அடிப்ப்டையாகக்கொண்ட கதைகள்தான். இவற்றில் ‘பிரம்ம ராக்ஷஸ்’ கம்பீரமான நடையையும் வளமான கற்பனையையும் கொண்டு தனி அழகுடன் விளங்குகிறது. ‘வேதாளம் சொன்ன கதை’ நையாண்டித் தன்மை பெற்றிருக்கிறது. இக்கதைகள் எல்லாம் துணுக்கமான சூழ்நிலை விவரிப்பும், மனித உணர்ச்சிகளை அழுத்தமாக வர்ணிக்கும் நடைநயமும் ஏற்று, கதைகளை ரசனைக்கு விருந்து ஆக்குகின்றன.

கதை சொல்லும் முறையில் விதம்விதமான உத்திகளைக் கையாண்டு வெற்றி கண்டுள்ள புதுமைப்பித்தன் பழைய பாணிகளிலும் கவாரஸ்யமான புதுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார். விக்கிரமாதித்தன் கதைப் பாணியில் ‘கட்டிலை விட்டிறங்காக் கதை’ என்றும், புராண ரீதியில் ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ என்றும், பஞ்சதந்திரக் கதைமாதிரி மிருகங்களைக் கதா பாத்திரங்களாக்கி ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ என்றும் அவர் கதைகள் உருவாக்கி உள்ளார். அவருக்கே இயல்பான கேலியும் நையாண்டியும் இவற்றில் தலைதுாக்கி நிற்கின்றன.

தனக்குள் தானே பேசிக் கொள்கிற தன்மையில்-மனமே ஒரு கதையைக் கூறுகிற முறையில்-விநாயக சதுர்த்தி எழுதப்பட்டுள்ளது. புறச் சூழ்நிலை வர்ணிப்பும், அங்கு நிகழ்கிற செயல்களின் விவரிப்பும் கதைக்கு கலைத்தன்மை சேர்த்துள்ளன.

புராண, இதிகாச மற்றும் காவியங்களில் இடம் பெற்றுவிட்ட கதாபாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கொண்டு, கால நிலைகளுக்கும் எழுதுகிறவரின் மனோதர்மத்துக்கும் புதிய நோக்கிற்கும் ஏற்ப மாற்றியும், திருத்தியும், அழகுபடுத்தியும் எழுதுவது இலக்கிய உலக மரபு ஆக இருந்து வருகிறது. புதுமைப்பித்தனும் இவ்வழியில் பழைய கதைகளை அவருடைய இஷ்டத்துக்குத் தகுந்தபடி புதிதாகப் புனைந்திருக்கிறார். அகல்யை, சாப விமோசனம், அன்று இரவில் ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை.

அகல்யை கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் அநேக கவிஞர்களாலும், நாடக மற்றும் கதை ஆசிரியர்களினாலும் புதிய புதிய கோணங்களில் புனைந்து எழுதப்பட்டிருக்கிறது. தமிழிலும் பல வெற்றி