பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/51

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 வாதவூரன் நெஞ்சில் வெள்ளம் அடங்கவில்லை. வழிநடையும் தூரந்தான் என்றான் ஈசன்.

கதையை வளர்த்துச் செல்கையில் ஒரு புதிய உத்தியாக, பழந்தமிழ் உரையாசிரியர்கள் கதைமாந்தரின் தன்மைகள் குறித்தும், நிகழ்ச்சிப் போக்குபற்றியும், வருவது உணர்ந்து முன்னரே எடுத்துரைப்பது போலவும் தங்களுக்குள் உரையாடுவதாகப் புதுமைப் பித்தன் எழுதி இருப்பது கதையின் தனித் தன்மையை அதிகப் படுத்துகிறது. கடவுள்பற்றிய புதுமைப்பித்தன் சிந்தனைகள் சுவாரஸ்யமானவை: அறிவொளி நிறைந்தவை. ஒரு கட்டுரையில் அவர் இப்படி எழுதி இருக்கிறார்.

‘ஒரு கூட்டத்தின் பாதுகாப்புக்கு அது அவசியமானால் ஒரு பொய்யைச் சொல்லித்தான் கடவுள் என்ற பிரமையை சிருஷ்டித்தால் என்ன? இந்தக் கடவுள் விஷயம் ரொம்ப சுவாரஸ்யமானது. அது தனி மனிதனுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. சமூகத்திற்கு ஒரு சக்தியைக் கொடுப்பதுபோல. நாஸ்திகம் தர்க்கத்தில் நிஜமாக இருக்கலாம். அது சுவாரஸ்யமற்றது. வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்ற முடியாதது. அது தனி மனிதனுக்கு சாந்தியை அளிக்கலாம். ஆனால், ரசனையற்றது. சுவையற்றது. வாழ்க்கையில் ஒரு வெறி ஏற்பட்டால்தான் பிடிப்புடன் முன்னேற முடியும். அதை சமயம் கொடுக்கிறது. அது சொல்லுகிற மோட்சத்தைவிட கொடுக்கா விட்டாலும், இது போதும் அந்த மோட்சைத்தைவிட இது மேலானது. தெய்வத்தைப் படைப்பது கவிஞன். தெய்வத்தை அறிபவன் ஸயன்டிஸ்ட் தெய்வம் என்றால் என்ன? இலட்சியம். அது எந்த வடிவத்தை எடுத்தால் என்ன? மனித வர்க்கத்தை ஒரு படி உயரச் செய்தால், அது தெய்வத்தின் சக்தி படைத்தது, அதுதான் தெய்வம் என்று ஏன் சொல்லக்கூடாது?’

கடவுள், மோட்சம் போன்ற விஷயங்கள் மனித உள்ளத்தில் உளைச்சல் ஏற்படுத்திக் கொண்டே இருப்பவை. கலைஞன் மனசுக்குக் குழப்பமும் வேதனையும் தரக்கூடியவை. இம் மனநிலைகளை புதுமைப் பித்தனின் சிற்பியின் நரகம் என்ற சிறந்த சிறுகதை நன்கு சித்திரிக்கிறது.

ஒரு சிற்பி, தெய்வத்தின் இலட்சிய வடிவம் ஒன்றை உருவாக்க சிரத்தை எடுத்து, சிரமங்கள் மேற்கொண்டு, நடராஜர் சிலையைச் செய்து முடிக்கிறான். அவனது அனுபவங்களும், பக்தி பரவசமாகி விடுகிற ஒரு அடியாரின் எண்ணங்களும், நாத்திகவாதம் பேசும் தத்துவவாதி பைலார்கஸ் என்பவனின் வாதங்களும் இந்தக் கதைக்கு