பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/60

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

 காட்டுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் கதைகளில் வருகிற சூழ்நிலை விவரிப்புகள் ரசனைக்கு விருந்தாகும் சொல்லோவியங்களாகக் காட்சி தருகின்றன. அப்படி வர்ணிப்பதிலும் அவருடைய தனிப் பார்வையும், கிண்டல் தொனியும் உயிர்ப்புடன் கலந்து காணப் படுகின்றன. உதாரணத்துக்கு, ‘மகாமசானம்’ கதையில் வருகிற சூழ்நிலை வர்ணனையைக் கூறலாம்:

‘சாயந்தரமாகிவிட்டால், நாகரிகம் என்பது இடித்துக் கொண்டும் இடிபட்டுக் கொண்டும் போகவேண்டிய ரஸ்தா என்பதைக் காட்டும் படியாகப் பட்டணம் மாறிவிடுகிறது. அதிலும் தேகத்தின் நரம்பு முடிச்சுப்போல, நாலைந்து பெரிய ரஸ்தாக்களும், டிராம் போகும் ரஸ்தாக்களும் சந்திக்கும் இடமாகி விட்டாலோ தொந்தரவு சகிக்கவே முடியாது. ஆபீசிலிருந்து ‘எச்சுப்’ போய் வருகிறவர்கள் இருட்டின் கோலாகலத்தை அனுபவிக்கவரும் அலங்கார உடை தரித்தவர்கள், மோட்டாரில் செல்லுவதற்கு இயலாத அவ்வளவு செயலற்ற அலங்கார வேஷவெளவால்கள் எல்லாம் ஏக மேனியாக எல்லாம் ஒன்றே! என்று காட்டும் தன்மை பெற்றவர்கள்போல் இடித்துத் தள்ளிக் கொண்டு அவரவர் பாதையில் போவார்கள். அன்றும் அம்மாதிரியே போய்க் கொண்டிருந்தார்கள்.

‘ஒற்றை வழிப் போக்குவரத்து’ என்ற ஸஞ்சார நியதி வந்ததிலிருந்து, உயர்ந்த அடுக்குக் கட்டிடங்களின் உச்சியின்மேல் நின்று கொண்டு பார்த்தால், அங்கே நாகரிகத்தின் சுழிப்புத் தெரியும். கரையைப் பீறிட்டுக் கொண்டு பாயும் வெள்ளத்தை அணைக்கட்டின் மேல் இருந்துகொண்டு பார்த்தால் எப்படியோ, அப்படி இருக்கும்.

‘நான் சொல்ல வந்த இடமும் அதுதான். மவுண்ட் ரோட் ரவுண்டானா மலைப்பழ. மாம்பழக் கூடைக்காரிகளின் வரிசை, அவர்களுக்குப் பின்புறம் எச்சில் மாங்கொட்டையைக் குழப்பித் துப்பி விட்டு, சீலையில் கையைத் துடைத்துக் கொள்ளும் ‘மெராஸ் - பறச்சிங்கோ’, கைத்தடியோடு சிலுமன் கொடுத்து உலாவிக் கொண்டிருக்கும் காபூலிவாலா, முகமதியப் பிச்சைக்காரன். நொண்டிப் பிச்சைக்காரன், குஷ்டரோகப் பிச்சைக்காரன், ராத்திரித் தொழிலுக்குத் தயாராகும் யுவதி-பாதையின் ஒரத்தில் உட்கார்ந்து கொண்டு நிம்மதியாகச் சீவிச் சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் அவள்-அப்புறம் நானாவித என்ன சார் ரொம்ப நாளாச்சே, பஸ் வந்துட்டுது’ஏறு என்கிற பேர் வழிகள் எல்லாம். அவசரம், அவசரம், அப்போது அவன் ரஸ்தாவின் ஒரத்தில் உள்ள நடை பாதையில் படுத்துச் சாவகாசமாகச் செத்துக் கொண்டிருந்தான்.