பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/63

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

‘அகன்ற மார்பில் யக்ஞோபவீதம்போல், ஆற்றில் நீர் பெயருக்கு மட்டிலும் ஓடிக்கொண்டிருந்தது.’

இந்தவிதமாக உவமைகளிலும் உருவகங்களிலும் புதுமை செய்து, நடைக்கு விசேஷமான அழகும், கதைக்குத் தனிச்சுவையும் உண்டாக்கியவர் புதுமைப்பித்தன்.

கதை மாந்தரை வர்ணிப்பதிலும் தனித் தன்மை காட்ட வேண்டும் என்று அவர் விரும்பியதை அவருடைய கதைகள் காட்டுகின்றன. பாத்திரங்களை வர்ணிப்பதில் பின்னல்கள் நிறைந்த சிக்கலான நடையைச் சில சமயங்களில் அவர் உபயோகிப்பது வழக்கம். உதாரணமாக-

‘ராமபத்மா பிரகரகர்த்தாக்கள் லிமிடெட் என இலக்கிய சேவைக்கெனவே உதயமான கம்பெனியின் நடையைவிட்டு இறங்கி, இருட்டுக்குள் தான் என்ற பேதம் அற்று லயித்துப்போன வி.பியை யார் என்ன சொன்னாலும் அவர் பிறவி எழுத்தாளர் தான். இந்த இலக்கிய சிங்காதனம் கிடைக்குமுன்பே, தம்முடைய பெயரின்மேல் அவருக்கு வெறுப்பு உண்டு. இலக்கிய சிங்காதனம் தம்முடைய மானஸிக நிச்சயத்தைப் பொறுத்தவரையாவது கிடைத்துவிட்ட பிற்பாடு, தம்முடைய தகப்பனார் வழிப் பாட்டன் பேரில் இந்தப் பெயரை முன்னிட்டு வெறுப்பு ஸ்திரப்பட்டது. மாட்டுக்கு பருத்தி விதை வச்சியா, வண்டியை இழுத்துக் குறட்டு ஒரமாக விட்டுவிட்டுவா’ என்று அதிகாரம் செய்வோரிடம், இடுப்பில் துண்டை வரிந்து கொண்டு கும்பிக் கொதிப்பை ஆற்றிக் கொள்ள முயலும் ஜீவன்களுக்குப் பலவேசம் என்ற பெயர் இருந்தால் முழுவதும் பொருத்தமாக இருக்கும். அன்று சென்ற யுகம் என மனக்குறளி காலநிர்ணயம் செய்யக்கூடிய ஒரு காலத்தில், தகப்பனாருடைய சுண்டுவிரலைப் பிடித்துக் கொண்டு அம்பாசமுத்திரம் உயர்தரப் பாடசாலைத் தலைமை ஆசிரியர் முன்பு, சிவப்பு உல்லன் குல்லாவுக்கு வெளியில் நாய்வால் மாதிரி நீட்டிக் கொண்டிருந்த வாழைநார் முடிப்புச் சடையும், எண்ணெய்க் கசடு வழியும் நெற்றியில் சாந்துப் பொட்டும், காதில் தட்டும். பச்சைக் கோட்டும், பிறந்த நாளுக்கு ஆச்சி வாங்கித்தந்த ஜரிகைக் கரை நீளப் பட்டு வேட்டியும் சிலேட்டும் கையுமாக நின்று நாமகள் கோட்டைவாசல் திறக்க வரங்கிடந்தபோது, என்னடா, பேருக்கு ஏற்றாற்போலப் பலவேசமாக இருக்கிறே; பின்னாலே புலி வேசம் போடப்போறே, கையில் என்ன இருக்கு தெரியுமா? என்று பிரம்பைக் காட்டி அவர் வரவேற்றது, மன்சில் சிலாசாசனம்போலப் பதிந்து கிடந்தது. அதிலிருந்து தொடங்கிய இந்த நாமாவளி ஆத்ம சோதனை இன்றுவரை தீர்ந்தபாடில்லை (நிசமும் நினைப்பும்).