பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வேண்டுமே ஒழிய, அவர்கள் வசனத்தில் கவிதை எழுதுகிறார்கள் என்று நினைக்கக்கூடாது. அவர்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்பது வேறு பிரச்சினை. இன்று வசன கவிதை என்ற தலைப்பில் வெளிவரும் வார்த்தைச் சேர்க்கைகள் வசனமும் அல்ல, கவிதையும் அல்ல. இது புதுமைப்பித்தனின் கருத்து.

ஆகவே, மரபுரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிற ரூபங்களுக்குப் புறப்பான ரூபத்தை புதுமைப்பித்தன் தனது கவிதைகளில் கையாண்டிருக்கிறார் என்று கொள்ளவேண்டும். கவிதை செவிநுகர் இனிமை பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை அவர் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார். அதன்படி ஒசை நயத்துக்கு அவர் கவிதைகளில் தனிக் கவனிப்பு அளித்திருக்கிறார். உள்ளத்தின் அனுபவத்தை உணர்ச்சி உத்வேகத்தை வெளிப்படுத்தக்கூடிய நயமான நடையை அவருடைய கவிதைகள் கொண்டிருக்கின்றன. -

அவருடைய வழக்கமான நையாண்டி, பரிகாசம், நம்பிக்கை வறட்சி, கருத்து ஆழம், சொல் வேகம் எல்லாம் அவரது கவிதைகளிலும் கலந்து அவற்றுக்கு தனித்தன்மை ஊட்டுகின்றன.

எல்லோரும்-எழுத்தில் என்னென்னவோ செய்து வயிறு வளர்க்கிற, புகழ் தேடுகிற பற்பலரும் கலைக்கொலை பண்ணிக் கொண்டிருக்கிற காலத்தில், சூழ்நிலையில், கலைகளின் தெய்வமாகிய, சரஸ்வதி தேவி நிஜமாக இருக்கமுடியுமா? அவள் உயிர் வாழ்வதாகச் சொல்லப்படுவது சரிதானா? இப்படி சரஸ்வதியையே நோக்கிக் கேட்கிற தன்மையில் எழுதப்பட்டுள்ள கவிதை ‘நிசந்தானோ சொப்பனமோ’!

‘செல்லரித்த நெஞ்சின்
சிறகொடிந்த கற்பனைகள்
இடுப்பொடிந்த சந்தத்தில்
இடறிவிழும் வார்த்தைகளில்
ஊரில் பவனிவர
உவப்புடனே நீயிருந்து
முத்தமிழை
பாலித்து, பயிராக்கி,
பசிய உயிர்தான் தோன்ற
வளர்ந்து வரும் வார்த்தை
நிசந்தானோ?
சத்தியமாய்க் கேட்கிறேன்
சரஸ்வதியே நிசந்தானோ?’