பக்கம்:புதுமைப்பித்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை).pdf/78

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

புதுமைப்பித்தன் சின்னச் சின்ன நாடகங்கள் சில எழுதி இருக்கிறார். கேலியும் குத்தலும் நிறைந்த அவை வாழ்க்கையின் யதார்த்த நிலைமைகளை உணர்ச்சியோடு சித்திரிக்கும் புதுமைப் படைப்பு களாகவும் அமைந்துள்ளன.

அப்படி அவர் முதலில் எழுதியது ‘பக்த குசேலா - கலியுக மாடல்’ என்பதாகும். பழைய குசேலர் கதைக்கு ஒரு பகிடி (Parody) போல எழுதப்பட்டது. குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பத்தில் வறுமை மிகுந்த சூழ்நிலையில்-சாப்பாட்டு நேரம் எவ்வளவு போட்டி நிறைந்ததாகவும் பரிதாபத்துக்கு உரியதாகவும் இருக்கும் என்பதைக் காட்டும் காட்சி உருக்கமானது.

மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இல்லாமையைச் சமாளிக்க ஒவ்வொருநாளும் எப்படி எப்படியோ கடன்கள் வாங்கி, அவற்றைத் திருப்பித்தர இயலாத நிலையில் சாக்குப் போக்குகள் கூறிச் சமாளித்து, எவ்வளவோ பாடுகள் பட்டு, சாமார்த்தியங்களைக் கையாண்டு காலம் கழிக்க நேரிடுகிறது என்பதை விவரிக்கிறது

‘நிச்சயமா நாளைக்கு’ எனும் நாடகம். செல்வம் மட்டுமே மிகுதியாகப் பெற்றுள்ள அறிவிலி ஒருவனையும், ஞானம் மாத்திரமே அதிகமாகப் பெற்ற அறிவாளி ஒருவனையும் கதை மாந்தராகக் கொண்டு, செல்வம் அதிக வலிமை உடையதா அறிவு சக்தி மிகக் கொண்டதா என ஆய்வு நடத்தும் இரண்டுக்குமிடையே நிகழும் போட்டியை சுவாரஸ்யமாகச் சித்திரிக்கும்-நாடகம் ‘வாக்கும் வக்கும்.’

இவை போக, சில வரலாற்று நூல்களையும் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார்:

அந்நாளைய இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியின் வாழ்க்கையை ‘பேசிஸ்ட் ஜடாமுனி’ என்ற தலைப்பில் அவர் எழுதினார். விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த இவ் வரலாற்றின் ஆரம்பப் பகுதி எடுப்பும்மிடுக்கும் வனப்பும் கொண்ட நடையில் சிறப்பாக அமைந்திருக்கும்.