பக்கம்:புது டயரி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

புது டயரி


வந்து விடலாம். ‘போர்’ அடிக்கிற பெரிய மனிதர்களைப் போல நம்மைத் தொந்தரவு பண்ணமாட்டார்கள்.

புத்தகங்களை மனிதன் பெற்ற பெருஞ்செல்வம் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அச்சுயந்திரம் வந்த பிறகு எத்தனை வகையான புத்தகங்கள், எத்தனை அழகான வடிவத்தில் வந்திருக்கின்றன!

நான் புத்தகப்பித்தன்; புத்தகப்புழு என்று சொல்லுங்கள்; ஏற்றுக் கொள்கிறேன். வேறு எதிலாவது இருக்கும் புழுவைவிடப் புத்தகப் புழு உயர்வுதானே? சின்னப் பிராயத்திலிருந்தே புத்தகம் சேர்ப்பதென்றால் எனக்கு ஆசை. நாவல்கள் பலவற்றைச் சேர்த்து வைத்தேன். இலக்கியப் புத்தகங்களையும் வாங்கிச் சேர்த்தேன். 1916-17 ஆம் வருஷம் என்று ஞாபகம். என் மாமா வீட்டில் இருந்து படித்துக் கொண்டிருந்தேன். என் தகப்பனார் வேறு ஊரில் இருந்தார். மத்தியான்ன நேரங்களில் சிற்றுண்டி வாங்கிச் சாப்பிடப் பணம் கொடுத்து வைப்பார். நான் அந்தப் பணத்துக்குப் புத்தகம் வாங்கிவிடுவேன். ஒரு முறை கந்தர் அநு பூபதி, கந்தர் சஷ்டி கவசம் போன்ற நூறு சில்லறை நூல்கள் அடங்கிய விநாயகர் கொத்து என்ற புத்தகத்தையும் அருணாசல புராணத்தையும் வாங்கி வந்தேன். அந்தக் காலத்தில் நான் மூன்றாவது பாரம் படித்துக் கொண்டிருந்தேன். விநாயகர் கொத்து, குட்டையான புத்தகம்; தடிமனாக இருக்கும். “இதை என் வாங்கினாய்?” என்று என் மாமா கேட்டார். “எனக்குப் பாடம்!” என்றேன். அது பாடம் அன்று என்று அவருக்கு நிச்சயமாகத் தெரியும் அதை வாங்கியதற்காகவும் பொய் சொன்னதற்காகவும். அவர் என்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்.

கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகங்களைச் சேர்த்து எங்கள் ஊரில் உள்ள எங்கள் வீட்டில் வைத்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/117&oldid=1152378" இலிருந்து மீள்விக்கப்பட்டது