பக்கம்:புது டயரி.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் புத்தகங்கள்

115

 வதற்காக என்னிடம் யாரோ கொடுத்திருக்கிறார்கள் என்று தோன்றும். நான் என்ன செய்வது? அப்படி ஒரு ‘கெட்ட பழக்கம்’ எனக்கு உண்டாகிவிட்டது.

பாரதியார், சில செய்யுள் நூல்களைப் படித்தால் சுவையில்லாத பாடல்களை அடித்து விடுவாராம். அவருக்கு அத்தனை ராஜச குணம்.

புத்தகங்களைப் படிக்கும்போது சில பேர் அடையாளம் வைப்பதற்காகத் தாளின் மூலையை மடித்து விடுவதுண்டு. அது நல்லதல்ல. பாராயண நூல்களில் ஒரு பட்டுக் கயிற்றை அடையாளம் வைப்பதற்காகவே சேர்த்துப் பைண்டு செய்திருப்பார்கள். வேறு நூல்களிலும் அந்த அமைப்பைப் பார்க்கலாம். இதுவரையில் படித்திருக்கிறோம் என்பதற்காக எல்லாருமே ஏதாவது காகிதத்தை வைப்பதுண்டு.

புத்தக அடையாளம் என்கிறபோது எனக்கு இரண்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வருகின்றன. நான் பல உரைகளும் அடங்கிய திருக்குறட் பதிப்பு ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். நள்ளிரவு, உறக்கம் வந்தது, புத்தகத்தை மூடிவிட்டுப் படுத்துக் கொண்டேன். விடியற் காலை எழுந்து மீண்டும் தொடர்ந்து படிக்கலாம் என்று எண்ணினேன். எங்கே விட்டேன் என்பதற்கு அடையாளம் வைக்கவில்லை. புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். அடையாளம் இருந்தது. தூக்க மயக்கத்தில் புத்தகத்தை மூடியபோது இடையே ஒரு பூச்சி அகப்பட்டு இறந்து போயிருந்தது. அதுதான் அடையாளம்! நான் படித்துக் கொண்டிருந்த இடம் எது தெரியுமோ? ‘கொல்லாமை’ என்னும் அதிகாரம்! அங்கேதான் இந்தக் கொலை நிகழ்ந்திருந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/122&oldid=1152388" இலிருந்து மீள்விக்கப்பட்டது