பக்கம்:புது டயரி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

புது டயரி

 ஒரு பையன் அடிக்கடி என்னிடம் கதைப் புத்தகங்களை வாங்கிச் சென்று படித்துவிட்டுக் குறித்த காலத்தில் திருப்பிக் கொண்டு வந்து கொடுப்பான். ஒரு முறை ஒரு வாரம் தாமதமாகக் கொண்டு வந்து கொடுத்தான். நான் அவனிடம், “ஏன் அப்பா, இவ்வளவு தாமதம்?” என்று கேட்டேன். “ஊரிலிருந்து என் தமக்கை வந்திருந்தாள். அவளும் படித்தாள். அதனால் தாமதம்” என்றான். நான் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டேன். அதைப் பிரித்துப் பார்த்தேன். அதில் தாழம் பூ அடையாளம் இருந்தது பூச்சி அடையாளம் இருந்ததைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. பூ அடையாளமோ, அடையாளத்துக்கு அடையாளம்; அதன் மணம் புத்தகத்தின் தாளில் ஏறியிருந்தது.

இதை நான் உவமையாக எடுத்துச் சொல்வதுண்டு. “நம்முடைய குழந்தைகளுக்குப் பெயரை அடையாளமாக வைக்கிறோம். எதையும் அடையாளமாக வைக்கலாம். ஆனால் நம் நாட்டில் இறைவன் பெயரை வைப்பது வழக்கம். அது பூ அடையாளம் போன்றது. குழந்தையை இனம் கண்டு கொள்ள அந்தப் பெயர் உதவுவதோடு இறைவனை நினைப்பூட்டிப் பக்தி மணமும் உண்டாகச் செய்கிறது” என்பேன்.

நாம் படித்து அடையாளம் செய்த புத்தகம் என்றால் அதன் மேல் ஒரு தனி அபிமானம் ஏற்படுவது இயல்பு. பழகின புத்தகம் என்பதற்காக மட்டும் அல்ல; திடீர் என்று ஓரிடத்தை எடுக்க வேண்டுமென்றால் நாம் செய்திருக்கும் அடையாளத்தைக் கொண்டு சட்டென்று கண்டு பிடித்து விடலாம்.

சில மகானுபாவர்கள் புத்தகம் வைத்திருக்கிறார்கள். வாங்கின மேனிக்கு அப்பழுக்கு இல்லாமல் அப்படியே இருக்கும். உள்ளே பிரித்துப் படித்துப் பார்த்தால்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/123&oldid=1152390" இலிருந்து மீள்விக்கப்பட்டது