பக்கம்:புது டயரி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நடந்த கதை

அமரர் திரு. வி. க. அடிக்கடி சொல்வார்; “ஏதாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். செய்யாமல் இருந்தால் இளமையில் ஒன்றும் தெரியாது. முதுமையில் மிகவும் இன்னல் உண்டாகும். வேறு பெரிய பயிற்சி செய்ய வேண்டாம். நாள்தோறும் ஒரு மைல், இரண்டு மைல் நடந்து பழக வேண்டும். நான் அப்படிச் செய்யாமையால் இப்போது துன்புறுகிறேன்” என்பார்.

என்னுடைய ஆசிரியப் பெருமான் டாக்டர் மகா மகோ பாத்தியாய ஐயரவர்கள் சிலநாள் நடப்பதுண்டு. அவர்கள் திருவேட்டீசுவரன் பேட்டையில் வாழ்ந்தார்கள். அங்கே திருவேட்டீசுவரன் கோயில் என்ற ஆலயம் இருக்கிறது. அதைச் சுற்றி நான்கு மாட வீதிகள் உண்டு. ஐயரவர்கள் வீடு தெற்கு மாடவீதியில் உள்ளது. அந்தத் தெருவுக்குப் பிள்ளையார் கோயில் தெரு என்று பெயர்.

சில நாள் ஐயரவர்கள், மேலே அங்கவஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டு இந்த நாலு வீதிகளையும் சுற்றி வருவார்கள். அப்போது கையில் ஜபமாலையையும் கொண்டு செல்வார்கள்; அவர்கள் இருந்த வீதியின் மேல் கோடியில், அதாவது மேல் வீதிக்குத் திரும்பும் மூலையில், ஒரு கிழவி இட்டிலி விற்றுக் கொண்டிருப்பாள். அந்த மூலையில்தான் ரிக்க்ஷாக்காரர்கள் ரிக்க்ஷாக்களுடன் இருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/136&oldid=1152931" இலிருந்து மீள்விக்கப்பட்டது