பக்கம்:புது டயரி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காது குத்தாதே!

153


மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் சவேரிநாத பிள்ளை என்ற கிறிஸ்தவர் படித்து வந்தார். அவருடைய பெயரைச் சிவகுருநாதபிள்ளை என்று மாற்றித் திருநீறும் அணியச் செய்தார். ஆனால் ஒன்று சொல்லவேண்டும். வேங்கடராமனைச் சாமிநாதன் ஆக்கியதும், சவேரிநாதனைச் சிவகுருநாதனாக்கியதும் வலிந்து செய்த காரியங்கள் அல்ல. இருசாராரும் உடன்பட்டுச் செய்த செயல்களே. அதனால் தான் இன்றளவும் தமிழ் தந்த வள்ளலுக்குச் சாமிநாதன் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

இந்த நிலைக்கு மாறாகச் சமரச மனோபாவத்தைக் காட்டும் செயல்கள் எவ்வளவோ உண்டு. சைவர்கள் வீட்டில் கிருஷ்ணசாமியையும் ராமசாமியையும் பார்க்கிறோம். ஆதிசைவர்களில் இராமசாமிக் குருக்கள் இருக்கிறார். சிதம்பரம் திக்ஷிதர்களில் வேங்கடேச திக்ஷிதர் இருக்கிறார். வீரசைவர்களில் இராமசாமி அடிகளார் இருக்கிறார்.

மயிலாப்பூரில் வைஷ்ணவர்கள் வீட்டில் கற்பகம் என்ற பெயருடைய பெண்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட ஆச்சரியமான செய்தி சுப்பிரமணிய ஐயங்கார் என்று ஒரு வைஷ்ணவர் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார். ஒர் அன்பர் எனக்கு அனுப்பிய பழைய விவாக முகூர்த்தப் பத்திரிகையில் (9-3-59) இந்த அதிசயத்தைக் கண்டேன்.

அவருடைய கனிஷ்ட புத்திரனாகிய சிரஞ்சீவி எஸ்.ஸ்ரீனிவாசனுடைய திருமணத்துக்குரிய அழைப்பு அது. அதில் அவர், ‘தாசன், எம். ஏ. சுப்பிரமணிய அய்யங்கார், மதுரை’ என்று கையெழுத்திட்டிருக்கிறார். அவர் மதுரையில் போக்குவரவுத் துறையில் பணிபுரிந்து விலகினவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/160&oldid=1153054" இலிருந்து மீள்விக்கப்பட்டது