பக்கம்:புது டயரி.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரியாத சங்கடம்

181

 நான் சிறு பையனாக இருந்தபோது சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களைப் படித்தேன். எங்கள் ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூர். சென்னைப் பக்கத்துப் பேச்சுப் புரியாது. சம்பந்த முதலியார் நாடகங்களில் உரையாடலினிடையே, ‘போய்க்கினு, வந்துக்கினு, பேசிக்கினே’ என்று வரும். முதலில் அவை எனக்கு விளங்கவில்லை. சென்னைக்கு வந்த பிறகே, ‘போய்க்கிட்டு’ என்று எங்கள் ஊரில் சொல்வதையே போய்க்கினு என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது. மேலும் ஆராய்கையில் தெலுங்கு மொழியில், ‘போய்க்கொனி’ என்று வழங்குவதும் தெலுங்கு நாட்டை அடுத்த சென்னையில் ‘போய்க்கினு’ என்று வழங்குவதும் ஒன்றுக்கொன்று உறவுள்ளன என்ற தொடர்பும் தெரிய வந்தது.

யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்கள் தமிழர்கள். அவர்கள் பேசும் தமிழில் பல சொற்கள் நமக்கு விளங்காதவை. நாம் ‘பேசிக் கொண்டிருந்தேன்’ என்பதை அவர்கள் ‘கதைத்துக் கொண்டிருந்தேன்’ என்பார்கள்; இங்கே கதைத்தல் என்றால் கதைவிடுதல் அல்லது பொய் கூறுதல் என்று பொருள்படும். பாரதியார் கூட அந்தப் பொருளில்தான், ‘உறவென்றும் நட்பென்றும் கதைக்கிறான்’ என்று ஆள்கிறார். ‘பேசினான்’ என்றால் அங்கே வைதான் என்று பொருள் கொள்வார்கள், ‘தூங்கினான்’ என்று உறங்குவதைச் சொல்கிறோம். அவர்கள் ‘நித்திரை கொண்டான்’ என்றே சொல்வார்கள். தூங்கினான் என்பதற்குத் தூக்குப் போட்டுக்கொண்டான் என்று அவர்கள் அர்த்தம் பண்ணிக் கொள்வார்கள். ‘சோப்பு நான் உபயோகிப்பதில்லை’ என்று நாம் சொல்வதை அவர்கள், ‘சோப்புப் பாவிப்பதில்லை’ என்பார்கள்.

முதல் முதலாக நான் இலங்கைக்குப் போயிருந்த போது யாழ்ப்பாணத்துக்கும் போனேன். அங்கே நீர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/188&oldid=1153245" இலிருந்து மீள்விக்கப்பட்டது