பக்கம்:புது டயரி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

புது டயரி

 போலியன் குதிரையின்மேல் இருந்தபடியே தூங்குவாணாம். மகாத்மா காந்தி நினைத்தபோது நினைத்த அளவுக்குத் தூங்குவாராம். நித்திராதேவி அவர்கள் ஆணைக்கு அடங்கி எப்படி நடந்தாள் என்ற சூட்சுமம் தெரியவில்லை.

நன்றாகத் தூக்கம் வருகிறவர்களுக்கு மெத்தை வேண்டும் என்பது இல்லை; தலையணை வேண்டுமென்பதில்லை. எந்த இடத்திலும் அவர்கள் தூங்கி விடுகிறார்கள். ஆனால் பல பேருக்கு அப்படி இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகப் படுத்தால்தான் உறக்கம் வரும். வெளியூர்களுக்குப் போகும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இடம் மாறிப் படுத்தால் தூக்கம் வராது. சிலருக்கு இரண்டு மூன்று தலையணைகளை உயரமாக வைத்துக் கொண்டு படுத்தால்தான் துயில் கொள்ள முடியும். சிலருக்கு அதிக உயரமே கூடாது. சிலர் கையையே தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு தூங்கி விடுகிறார்கள். அவர்கள் மகா பாக்கியசாலிகள். சிலர் தங்கள் தலைமேல் தலையணையை வைத்தபடியே தூங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தலைக்குக் கீழும் தலயணை இருக்கும்; தலைக்கு மேலும் இருக்கும்.

சிலர் இடப்பக்கமாக ஒருக்களித்துத் தூங்குவார்கள்; சிலர் வலப்பக்கமாகத் திரும்பி உறங்குவார்கள். மல்லாக்கப் படுத்தால்தான் சிலருக்குத் தூக்கம் வரும். சிலர் குப்புறப் படுத்துக்கொண்டு உறங்குகிறார்கள்; அப்படி உறங்குவது உடம்புக்கு நல்லதல்ல என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இடப்பக்கமாகத் திரும்பிப் படுப்பதுதான் ஆண்களுக்கு நல்லதாம்.

“இடது கையில் படுப்போம்” என்று தேரையர் சொல்கிறார். ஆனால்,அந்தத் தேரையரைக் கேட்டுக் கொண்டா நமக்குத் தூக்கம் வருகிறது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/193&oldid=1153268" இலிருந்து மீள்விக்கப்பட்டது