பக்கம்:புது டயரி.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டிரிங் டிரிங்!

215


இந்தத் தொந்தரவுகளையாவது சகித்துக் கொள்ளலாம். வேறு ஒருவகைத் தொல்லையை எண்ணும்போது தான் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. அவசர அவசரமாக ஒருவர் கூப்பிடுவார். அவருக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இராது. அவர் டெலிபோன் வழியாகப் பேசத் தெரிந்தவர்; நான் டெலிபோன் வசதி உள்ளவன்; அவ்வளவுதான். அவர், “ஸார், ஸார், ஓர் உபகாரம்: என்னை மன்னித்துக் கொள்ளவேண்டும்; அந்த நாலாந் தெருவிலுள்ள... அவரைத் தயை செய்து கூப்பிடவேண்டும். ஒரு முக்கியமான சமாசாரம். உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறதற்கு வருந்துகிறேன். யாரையாவது அனுப்பி அவரை அழைத்துவரச் சொல்லுங்கள். பெரிய உபகாரம் என்று கெஞ்சுவார். மனிதர் ஏதோ சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருப்பார் என்று தோன்றும், பையனை விட்டு அவரை அழைத்துக் கொண்டு வரச் சொல்வேன். அவர் வந்து பேசுவார். இன்னும் ஒரு வாரம் கழித்து எங்கோ போவதாக ஏற்பாடானதை, இரண்டு நாள் தள்ளிப் போட்டிருப்பதாகச் சொல்லுவார், அவசரப்பட்ட ஆசாமி. இதற்குத்தான் இத்தனை கெஞ்சல், இத்தனை கொஞ்சல்!

மணி இரவு பதினென்று; டிரிங் டிரிங் கேட்கும்; நான் எடுக்க மாட்டேன்; என் மனைவி எடுத்துக் கேட்பாள், “பாவம்! யாருக்கோ உடம்பு சரியில்லையாம்” என்று என்னிடம் இரக்கத்தோடு சொல்வாள், “இது டாக்டர் வீடு அல்லவே!” என்று நான் சொல்வேன். “அவர்களுக்கு யாரோ இங்கிருந்து வரவேண்டுமாம்” என்று அவள் கூறுவாள். “நீ போகப் போகிறாயா?” என்று கிண்டல் பண்ணுவேன், “நன்றாயிருக்கிறது நீங்கள் பேசுவது! ஆபத்து ஸம்பத்து என்பது எல்லோருக்கும் உள்ளது தானே? மனிதர்களுக்கு மனிதர் உபகாரம் பண்ணாவிட்டால்...” “சொல்லுங்கள்... நாலாந்தெருவா?... ராமகிருஷ்ணனா... அத்தையா... ருக்மிணி அம்மாளா?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/222&oldid=1153472" இலிருந்து மீள்விக்கப்பட்டது