பக்கம்:புது டயரி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஞான தீர்த்தம்

“ஞான தீர்த்தம் இன்னும் தயாராகவில்லையா?” என்று கேட்டார், அந்தப் பெரியவர். அவர் சுப்பிரமணிய பூஜை செய்கிறவர். கிருகஸ்தராக இருந்தாலும் மகான்; தம் நலமே கருதாதவர். ஞான தீர்த்தம் என்று குறிப்பிட்டது எந்தத் தீர்த்தம் என்று எனக்கு தெரியவில்லை. அப்போது பிற்பகல் மூன்று மணி இருக்கும். பூஜையெல்லாம் முடிந்து நண்பகல் உணவு உண்டு இளைப்பாறி எழுந்திருந்தார். அப்போது எந்தத் தீர்த்தத்தைக் கேட்கிறார்? எதற்காகக் கேட்கிறார்? எனக்கு விளங்கவில்லை.

இதோ தயாராகிவிட்டது; கொண்டுவருகிறேன்” என்று உள்ளிருந்து பதில் வந்தது. சிறிது நேரத்தில் இரண்டு தம்ளர் டபராக்களில் ஞானதீர்த்தம் வந்தது. என்னவென்று தெரிகிறதல்லவா? சாட்சாத் காபிதான்.

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. “என்ன, இதைப் போய் ஞானதீர்த்தம் என்கிறீர்கள்? நான் வேறு ஏதோ புனிதமான தீர்த்தம் என்றல்லவா நினைத்தேன்?” என்றேன்.

“இது இல்லாவிட்டால் மூளை வேலை செய்யாது. எந்த வேலையும் ஓடாது. நமக்கு மூளை இருந்தாலும் அதற்குச் சுறுசுறுப்பு ஏற்றுவதற்கு நாளைக்கு இரண்டு தடவையாவது இந்த ஞானதீர்த்தம் வேண்டியிருக்கிறது” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/50&oldid=1149572" இலிருந்து மீள்விக்கப்பட்டது