பக்கம்:புது டயரி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞான தீர்த்தம்

49

 காபி சாப்பிடாமல் இருப்பதனால் எனக்கு எவ்வளவு மதிப்பு உண்டாகிறது தெரியுமா? பெண்டு பிள்ளைகளைத் துறந்து போன துறவிக்குக்கூட அவ்வளவு மதிப்பு இருப்பதில்லை. “உங்களுக்குத் தலைவலி வருகிறதில்லையா?”, “அதெப்படி உங்களைச் சுற்றி எல்லாரும் காபி குடிக்கும் போது நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்?”, “எப்படி உங்களுக்குக் காபியை விட்டிருக்க முடிகிறது?” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வியைக் கேட்கிறார்கள். சாதம் சாப்பிடாமல் இருந்தால்கூட அதைப் பெரிய விரதமாகக் கருதமாட்டார்கள் போலிருக்கிறது, காபி சாப்பிடா விரதம் பெறுகிற கவுரவத்தை நினைக்கிறபோது.

காலையில் வேறு எதைச் சாப்பிட்டாலும், “காபி சாப்பிட்டாயிற்றா?” என்றுதான் கேட்கிறார்கள். காபி என்பதற்குக் காலைப்பானம் என்று அர்த்தம் வந்து விட்டது.

நான் கல்கத்தாவுக்குச் சில முறைகள் போயிருக்கிறேன். அன்பர்களோடு அளவளாவும்போது வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருப்பேன். சிலேடையாகப் பேசுவேன். புதிய கவிகளைப் பாடுவேன். ஒரு முறை அந்த நகரில் உள்ள பாரதி தமிழ்ச் சங்கத்துக்குப் போயிருந்தேன். வழக்கம்போல் ஒருநாள் பிற்பகலில் அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். சிற்றுண்டியும் காபியும் வந்தன. எனக்குப் பால் தந்தார்கள். அப்போது அன்பர்களின் விருப்பப்படி சில சிலேடைப் பாடல்கள் சொன்னேன். நேஷனல் இன்ஸூலேடட் கேபிள்ஸ் கம்பெனியில் மானேஜராக இருந்த திரு டி. எஸ். சீதாபதி அவர்கள், “காபிக்கும் பழையதுக்கும் சிலேடை சொல்லுங்கள்” என்றார், நான் ஒரு சிலேடை வெண்பாவைச் சொன்னேன். அதில் என் இயல்பையும் இணைத்துச் சொன்னேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/56&oldid=1149583" இலிருந்து மீள்விக்கப்பட்டது