பக்கம்:புது டயரி.pdf/74

இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாலாவது

67

 வெளியில் எறிந்து விட்டார். ‘நல்ல வேளை! நமக்கு வாய்ப்பாகக் கிடைத்தது’ என்று எண்ணி அதை யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துக்கொண்டேன். பெரியவர் போனபிறகு அந்தத் துண்டை வாயில் போட்டுக் கடித்து மென்றேன். அது புகையிலைக் காம்பு! என்ன ஆயிற்றுத் தெரியுமா? என் மார்பை அடைத்தது. தலை சுழன்றது. ‘உடம்பெல்லாம் வேர்த்தது. வாந்தி எடுக்க வந்தது. ஆனால் எடுக்கவில்லை. இன்னதென்று சொல்லத் தெரியாத மயக்கமும் வேதனையும் உண்டாயின. என்னைப் பார்த்தவர்கள் பயந்துபோய் விட்டார்கள். நான் மெல்ல உண்மையை வெளியிட்டேன். பிறகு மோர் கொண்டு வந்து குடிக்கச் செய்தார்கள். கண்ணைச் சுற்றியது. மார்பு அடைப்புச் சிறிது வாங்கியது. அப்படியே படுத்து அயர்ந்து உறங்கி விட்டேன்.

மற்றோர் அநுபவம். எல்லாருக்கும் புகையிலையின் மேல் காதல் உண்டாவதற்குக் காரணமான நிகழ்ச்சிதான் அது. பல் இடுக்கில் ஏதோ புகுந்துகொண்டு வலித்தது. கலைமகள் காரியாலயத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது புதுமைப்பித்தன் வந்தார். அவர் எப்போதும் வாயில் புகையிலையைப் போட்டுக் கொண்டு குதப்புவார். பேசும்போது முகத்தைத் துாக்கி வைத்துக்கொண்டு, புகையிலைப் பாஷையில் பேசுவார்; அவர் பேசும்போது ழகரம் அதிகமாக வரும். வாயில் புகையிலை இருந்தால் அப்படித்தான் பேச முடியும்.

வாயில் புகையிலையை அடக்கியபடி தெளிவாகப் பேச முடியாது என்றுதான் நினைத்திருந்தேன். ஓர் அன்பரைக் கண்டபிறகு அந்த நினைப்பு மாறிவிட்டது. அவர் வாயில் தாம்பூலத்தை அடக்கிக் கொண்டு உரையாடுவது மட்டும் அன்று; மேடைப் பேச்சுக்கூட நிகழ்த்துவார். சுதேச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/74&oldid=1150760" இருந்து மீள்விக்கப்பட்டது