பக்கம்:புது மெருகு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வணங்கா முடி

95

பும்போது வளையாதா? அந்த வளைவிலே மகாராஜாவின் வெற்றி மிடுக்குப் புலப்படவில்லையா?"

"ஆஹா! என்ன சாமர்த்தியம்! என்ன அருமையான கருத்து!" என்று அங்கே இருந்தவர்கள் ஆரவாரித்தனர். மகாராஜாவின் உள்ளம் மகிழ்ச்சி நிரம்பி அலர்ந்ததை அவர் முகத்தின் மலர்ச்சி தெரிவித்தது.

"புலவர் இந்தக் கருத்தைப் பாடலாகச் சொல்லலாமே" என்று ஒரு மந்திரி சொல்லும்போதே, "இதோ, சொல்கிறேன்,கேளுங்கள்" என்று சவ்வாதுப் புலவர் பின்வரும் அழகிய பாடலைச் சொன்னார்.

கிளையாளன் சேது பதிரகு நாயகன் கிஞ்சுகவாய்
இளையார் கலவி யிடத்தும்நம் ஈச ரிடத்தும் அன்றி
வளையாத பொன்முடி சற்றே வளையும் மகுடமன்னர்
தளையா டியகையில் காளாஞ்சி ஏந்தும் சமயத்துமே.

[மந்திரி முதலிய சுற்றத்தையுடைய ரகுநாத சேதுபதியினது, முருக்கம் பூப்போன்ற சிவந்த வாயையுடைய இளம் பெண்களோடு இன்புறும் சமயத்திலும் சிவபெருமான் முன்னிலை யிலுமன்றி வணங்காத, பொன் அணிந்த திருமுடி, மகுட மணிந்த பகையரசர்கள் விலங்கு பூட்டியிருந்த தம் கைகளில் காளாஞ்சி ஏந்தும் சமயத்திலும் சற்றே வளையும். கிளை- சுற்றம். கிஞ்சுகம்- முள்ளூமுருங்கை. இளையார்- இளம் பெண்கள். தளை- விலங்கு.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/100&oldid=1549608" இலிருந்து மீள்விக்கப்பட்டது