பக்கம்:புது மெருகு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

புது மெருகு

பினாள். கழுத்தில் மஞ்சட் சரடு இருக்கிறது. அது போதும். இது மிகை தானே? இந்தச் சமயத்தில் உதவுவதற்கு இது கிடைத்தது. இப்பொழுதுதான் இது மங்கலம் பொருந்தியதாயிற்று" என்று சர்க்கரை வள்ளல் சொல்லச் சொல்லப் புலவருடைய கண்களில் நீர் சுரந்து வழிந்தது.

"இப்படி யாரையும் நான் கண்டதில்லை. உலகத்தில் மழை பொழிவது உங்களுக்காகத்தான். நான் பரிசு வாங்க வரவில்லை. உங்களைப் பார்த்துப் போகத்தான் வந்தேன்" என்று தழுதழுத்த குரலில் புலவன் பேசினான்.

"தாங்கள் வருந்துவதற்கு நியாயம் ஒன்றுமே இல்லையே. என்னுடைய வாழ்நாள் இன்னும் எவ்வளவு காலமோ, யார் அறிவார்கள்? இந்தச் சிறையே எனது இறுதி வாசஸ்தலமாக இருந்தாலும் இருக்கலாம். இந்தச் சமயத்தில் தங்களுக்கு இதையாவது கொடுக்க முடிந்ததுபற்றி என் நல்லூழை வாழ்த்துகிறேன்." என்று சர்க்கரை வள்ளல் கூறினார்.

புலவனுக்குப் பேச வரவில்லை. பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டான்.

கடைசியில் விடை பெற்றுக்கொண்டான்.

"இத்தகைய தாதாவைச் சிறையில் அடைக்கத் துணிந்தவன் மிகவும் கல் நெஞ்சனாக இருக்கவேண்டும். கடவுள் இவரையும் படைத்து அவனையும் படைத்திருக்கிறாரே!" என்று புலவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ‘அந்த அதிகாரியிடம் போய் நம்முடைய ஆத்திரந்தீர வைதுவிட்டு வரலாம்' என்று ராமப்பையரை நோக்கிப் புறப்பட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/107&oldid=1549616" இலிருந்து மீள்விக்கப்பட்டது