பக்கம்:புது மெருகு.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சம்பந்தச் சர்க்கரை

103

3

தளவாய் ராமப்பையர் அவன் நினைத்தது போல அவ்வளவு கொடியவர் அல்ல. தமிழ்ப் புலவர்களை ஆதரிக்கும் இயல்பு அவரிடமும் இருந்தது. வித்துவானுக்கு எங்கும் தடையின்றிப் புகும் உரிமை உண்டு; ஆதலால் அப்புலவன் நேரே ராமப்பையரை அணுகினான். ஒன்றும் பேசாமல் சர்க்கரை கொடுத்த தாலியை எடுத்து நீட்டி, "இதைப் பார்த்தீர்களா?" என்றான்.

"என்ன இது?" என்று பரபரப்பாகக் கேட்டார் தளவாய்.

புலவன் ஒரு பாட்டிலே பதில் சொன்னான்;

"கொங்கினில் ராமப் பயனதி காரக் குரூரத்தினால்
கங்குல் இராப்பகல் சர்வசங் காரஞ்செய் காலத்திலே
சிங்கநற் சம்பந்தச் சர்க்கரை தேவி திருக்கழுத்தின்
மங்கலி யந்தனைத் தந்தான் தமிழ்க்கவி வாணருக்கே"

என்று தன்னுடைய ஆத்திரத்தையெல்லாம் கொட்டினான். ராமப்பையரது கலங்காத நெஞ்சமும் கலங்கியது. "ஹா! நீர் என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்.

"சொல்வது என்ன? சமுகத்தின் அதிகாரம், புருஷர் இருக்கையிலே நல்ல மகளிர் தம் மங்கலியத்தை இழக்கும்படி செய்கிறது. இதனால் அவர்கள் மங்கலம் இழக்கவில்லை. மங்கலம் இழப்பவர்கள் வேறு" என, என்ன வந்தாலும் வரட்டுமென்று துணிந்து பேசலானான் புலவன்.

"அப்படியா! சம்பந்தச் சர்க்கரை கொடுத்ததா இது!" - அந்த மங்கலியம் ராமப்பையர் நெஞ்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/108&oldid=1549618" இலிருந்து மீள்விக்கப்பட்டது