பக்கம்:புது மெருகு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூங்கோதை

113

ஒருவர் மெல்லத் தமக்குள்ளே கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. 'கவிராயர் மனைவி நன்றாகப் படித்திருக்கிறாள். நம்முடைய வாயை அடைக்கத் தக்க மேற்கோளைத் தெரிந்து நம் பேச்சுக்குப் பதிலாக அனுப்பியிருக்கிறாள். இது நமக்குத் தெரியாத நூலாகவும் இருக்கிறதே!' என்று எண்ணி மனக்குழப்பமும், 'தவறு செய்துவிட்டோமே' என்ற அச்சமும் உடையவர்களாகி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

அப்போது எம்பெருமான் கவிராயர் வந்தார். அவர் வரவைக் கண்டு யாவரும் எழுந்து அஞ்சலி பண்ணினர். "வாருங்கள். வந்து நெடுநேரம் ஆயிற்றே?" என்று சொல்லிக் கவிராயர் அவர்களை வரவேற்றார்.

"முதலில் உங்கள் மனைவியாரிடம் 'எங்களைப் பொறுத்தருள வேண்டும்' என்ற எங்கள் வேண்டு கோளைத் தெரிவித்து அவர்களுடைய பெருமையை அறியாத எங்களை மன்னிக்கச் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்" என்றார் ஒருவர்.

கவிராயருக்கு ஒன்றும் விளங்கவில்லை. விரைவாக உள்ளே சென்று, "என்ன நடந்தது?" என்று பூங்கோதையைக் கேட்டார். புன்சிரிப்போடு நிகழ்ந்தவற்றை அவள் சொல்லி, "வந்த விருந்தினர்களை அவமதித்த குற்றத்தை நீங்கள் பொறுத்தருள வேண்டும்" என்றாள்.

கவிராயருக்கு உள்ளத்துக்குள்ளே மகிழ்ச்சி. புன்முறுவலோடு திண்ணைக்கு வந்து, "உங்களுடைய மன்னிப்பைத்தான் அவள் வேண்டுகிறாள்" என்று சொல்லி அமர்ந்தார்.

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/118&oldid=1549636" இலிருந்து மீள்விக்கப்பட்டது