பக்கம்:புது மெருகு.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

புது மெருகு

லாம் தலையிட்டுக்கொண்டு பேசுவதில் அவருக்கு உள்ள துணிவு வேறு யாரிடமும் இராது. அந்தச் சவடால் ராயரைத் திருப்தி பண்ணினால்தான் ஜமீன்தாரின் திருப்தியைப் பெறலாம் என்பது ஊரறிந்த ரகசியம்.

ஒரு நாள் ஒரு புலவர் கற்பூர நாயக்கரை நாடி வந்தார். அவர் நாடு முழுவதும் சுற்றினவர். முரடர்களுக்கு முரடராகவும் சாதுக்களுக்கச் சாதுவாகவும் இருப்பார். உலகம் அறிந்தவர். இன்னாரிடம் இன்னபடி பேசவேண்டும். இன்ன திசையில் வெட்டினால் இன்ன பக்கம் சாயும் என்ற ரந்திரங்களெல்லாம் தம் அநுபவத்தால் தெரிந்துகொண்டவர் அவர்.

கற்பூர நாயக்கருடைய தரிசனம் அவருக்குக் கிட்டியது. நாயக்கருடைய திருமுக விலாசத்தைக் காணும்போதே அவர் மூளையையும் புலவர் அளவெடுத்துவிட்டார். 'இந்த இடத்தில் நம்முடைய வெண்பாவும் விருத்தமும் கவைக்கு உதவா. ஆளுக்குத் தகுந்த வருணனையும் பாட்டுமே இப்போது வேண்டும்' என்று எண்ணிக்கொண்டார்.

முதலில் தாம் கொண்டுபோன எலுமிச்சம் பழத்தை ஜமீன்தார் கையில் சமர்ப்பித்தார். சமர்ப்பித்துவிட்டுப் பல்லை இளித்துக்கொண்டு நின்றார். ஜமீன்தார் புலவரைத் தம் கடாட்ச வீட்சண்யத்தால் ஒரு தடவை பார்த்துவிட்டு அருகில் நின்ற தம் அந்தரங்க மந்திரியைப் பார்த்தார். அந்தப் பார்வையில் 'இவரை விசாரிக்க வேண்டும்' என்ற அர்த்தம் இருப்பது மந்திரிக்குத் தெரியும்.

"நீர் யார்? எந்த ஊர்?" என்று மந்திரி கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/121&oldid=1549642" இலிருந்து மீள்விக்கப்பட்டது