பக்கம்:புது மெருகு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொல்காப்பியரின் வெற்றி

11

"நல்ல யோசனை! நாலு பேருக்கு நடுவில் அவன் முகத்தில் கரியைத் தீற்றி அனுப்புவது சரியான தண்டனை. நல்லது. உன் அறிவுக்கேற்ற தந்திரம். நல்ல காரியம்."

அகத்தியர் ஆனந்தக்கூத்தாடினார். தொல்காப்பியத்தையும் தொல்காப்பியரையும் அடியோடு வீழ்த்தி விட்டோம் என்பது அவர் ஞாபகம்.

3

தொல்காப்பிய அரங்கேற்ற விழாவுக்குரிய நாள் வந்தது. பாண்டியன் சபையில் நடப்பதென்றால் சொல்ல வேண்டுமா? இடைச்சங்கப் புலவர்கள் எல்லோரும் கூடினர். இலக்கணம் வகுப்பதற்கு எவ்வளவோ திறமை வேண்டும். ஆயிரம் இலக்கியங்கள் எழுந்தால் ஓர் இலக்கணம் உண்டாகும். அவ்வளவு பெரிய காரியத்தைத் தொல்காப்பியர் சாதித்திருக்கிறார்.

பாண்டியன் மாகீர்த்தி உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருக்கிறான். அவனுக்கு அருகே மற்றோர் உயர்ந்த இருக்கையில் அதங்கோட்டாசிரியர் எழுந்தருளியிருக்கிறார். எங்கும் புலவர் கூட்டம்; தமிழ் பயில்வார் தலைகள்.

அரங்கேற்றம் முறைப்படி தொடங்கியது. கற்றுச் சொல்லி ஒருவன் தொல்காப்பியச் சூத்திரத்தை வாசித்தான். தொல்காப்பியர் பணிவோடு உரை கூறலானார். அவ்வளவு பேரும் ஒலியடங்கிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு சூத்திரம் முடிந்தது. அதங்கோட்டாசிரியர் மெல்ல அந்தச் சூத்திரத்தில் ஒரு தடையை எழுப்பினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/16&oldid=1548525" இலிருந்து மீள்விக்கப்பட்டது