பக்கம்:புது மெருகு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

புது மெருகு

புலவர்களெல்லாம் திடுக்கிட்டனர்; "இதென்ன? ஆரம்பிக்கும் போதே இப்படிக் கண்டனம் செய்கிறாரே!"என்று அஞ்சினர். ஆனால் அடுத்த கணத்தில் தொல்காப்பியர் தக்க விடையைக் கூறவே, சபையினர் தம்மை அறியாமலே ஆரவாரம் செய்தனர்.

அந்த முதற் சூத்திரத்தில் ஆரம்பித்த தடையை அதங்கோட்டாசிரியர் நிறுத்தவே இல்லை. மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போனார். அவற்றுக்கு உடனுக்குடன் தக்க விடைகளைச் சொல்லி வந்தார் தொல்காப்பியர். அந்த வினாவிடைப் போரில் தொல்காப்பியருடைய அறிவுத் திறமை பின்னும் ஒளி பெற்றது. சிங்கக்குட்டி துள்ளி எழுவது போல அவருடைய விடைகள் பளீர் பளீரென்று அவர் வாயிலிருந்து எழுந்தன. அதங்கோட்டாசிரியர் அவர் கூறும் விடைகளைக் கேட்டு அகத்துள்ளே மகிழ்ச்சி பூத்தார். அவர் கேட்கும் கேள்விகள் அகத்தியருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றத்தானே? அறிவின் ஒளியைக்கண்டு போற்றுவதில் உண்மை அறிவாளியாகிய அந்தப் பெரியார் தாழ்ந்தவர் அல்லவே?

ஒரு நாள், இரண்டு நாள், பல நாட்கள் அரங்கேற்றம் நடைபெற்றது. தமிழின் இலக்கணத்தை மூன்று அதிகாரங்களாகத் தொல்காப்பியர் வகுத்துச் சொல்லியிருந்தார். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற அந்த மூன்றுள் ஒவ்வொன்றிலும் ஒன்பது ஒன்பது இயல்களை அமைத்திருந்தார். எழுத்ததிகாரம் அரங்கேற்றி முடிந்தது; அதன் ஒழுங்கான அமைப்பு, புலவர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சொல்லதிகாரம் நடந்தது; அதிலுள்ள முறை வைப்பும், வகையும் அறிஞர்களுக்கு வியப்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/17&oldid=1548526" இலிருந்து மீள்விக்கப்பட்டது