பக்கம்:புது மெருகு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

புது மெருகு

குவியல் குவியலாக வந்தன. புலவரும் கலைஞரும் திரண்டு வந்தனர். அரண்மனையில் பெருங்கூட்டம். ஆடலும் பாடலும் முழங்கின. முரசும் சங்கும் ஒலித்தன. கபிலரும் பாரியும் அறிவுக்கும் கொடைக்கும் அடையாளம் போல வீற்றிருக்கின்றனர். ஒருபால் கிளிகளும் குருவிகளும் சர்க்கரைப் பொங்கல் விருந்துண்டன.

"பாரி வாழ்க!" என்று வாழ்த்துவாரோடு கிளிகளும் சேர்ந்து, "பாரி வாழ்க" என்கின்றன. "கபிலர் வாழ்க" என்று வாழ்த்துவாரோடு பாரியும் சேர்ந்து வாழ்த்துகின்றான். கபிலர் வேதமோதும் தம் இனிய கண்டத்திலிருந்து புறப்படும் கணீரென்ற தொனியில், "நம்முடைய தோழர்களாக வளர்ந்து முற்றுகைக் காலத்தில் இரவில் காட்டிலிருந்து நெற் கதிர் கொண்டுவந்து நமக்கு உதவிய இந்தக் கிளிகளும் குருவிகளும் வாழ்க!" என்று வாழ்த்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/35&oldid=1548631" இலிருந்து மீள்விக்கப்பட்டது