பக்கம்:புது மெருகு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

புது மெருகு

வில்லை. சொன்னவை சில வார்த்தைகளே, ஆனாலும் அவை கூரிய அம்புபோல உயிர்நிலையில் பாயத் தக்கவை, வீரர் விடும் அம்பல்ல; கொலையொன்றையே கருதிக் காட்டில் திரியும் வேடர் விடும் முரட்டு வாளிகள் அவை. "நீ சோழனுக்குப் பிறந்தவனா?" என்ன கொடூரமான வார்த்தைகள்! - புலவர் மனத்தில் இந்த எண்ணச் சுருள்கள் விரிந்தன,

'புலவரை, அந்தணர் பெருமானை நாம் வட்டு வீசிப் புண்ணாக்கினோமே! இது வெறும் விளையாட்டு. இதில் நேர்ந்த தவறுகளைப் பொறுக்கத் தெரியாத நான், எப்படி உலகத்தார் தவறுகளைப் பொறுக்கும் சால்புடையவனா‍வேன்? இவ்வளவு நாள் பழகிய இப் புலவர் பெருமான், உண்மையில் பொறுத்தற்கரிய தவறு செய்தாலும் கெழுதகைமை பாராட்டிப் போற்ற வேண்டியவன் அல்லவா நான்? விளையாட்டில் வினையைப் புகுத்தினேனே. என் மடமை இது. இந்தச் சதுரங்கத்தைப் போர்க்களத்துப் படையோடு உவமித்துப்பேசிய நான் உண்மையிலேயே போரை எழுப்பிப் புண்ணையும் உண்டாக்கிவிட்டேனே! என்னுடைய ராஜச குணம் விளையாட்டின்பத்தை உணர முடியாமல் செய்துவிட்டதே. ‍இனி இவரை நிமிர்ந்து பார்த்து நேருக்கு நேரே பேச எனக்கு வாயேது?' - இவ்வாறு படர்ந்தது மாவளத்தான் கழிவரக்கம்.

புலவர் நினைக்கிறார்: 'இப்போதல்லவா இவனுடைய பெருந்தன்மையை உள்ளவாறு உணர முடிகிறது? நம்முடைய கொடிய சொல்லம்புகளைத் தாங்கிக்கொண்டு இவன் மேரு மலைபோல் விளங்குகிறான். முதலில் வஞ்சகம் செய்த குற்றமோ என்னுடையது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/59&oldid=1549144" இலிருந்து மீள்விக்கப்பட்டது