பக்கம்:புது மெருகு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

புது மெருகு

பாஷைக்கே ஒரு தனியழகு உண்டாயிற்று. நாள் முழு வதும் பேசிக்கொண்டிருந்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாமென்று தோற்றியது, நிர்வாண தேச அரசனுக்கு. சாதுவன், பாஷையாகிய காந்தத்தால் அந்த நரமாமிச பக்ஷிணிகளின் இருதயத்தைக் கவர்ந்தான்.

அடே! யார் அங்கே! இவனுக்கு நிறையக் கள் ளும் மாமிசமும் கொடுங்கள். மிகவும் அழகான பெண் ஒருத்தியையும் அளியுங்கள் என்று உத்தரவிட்டான், நாகர் தலைவன்.

சாதுவனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. "அவை எதற்கு?" என்று கேட்டான்.

"எதற்கா? சந்தோஷமாக இருப்பதற்கு!"

"இவைகளால் உடம்புக்குச் சந்தோஷமே ஒழிய உயிருக்கு என்ன சந்தோஷம்?"

"அதென்ன சமாசாரம்? உயிர் வேறு, உடம்பு வேறு என்று உண்டா?"

அவனுக்குச் சாதுவன் மெல்ல மெல்ல உபதேசம் செய்யத் தொடங்கினான். உடம்புக்குள் உயிர் என்ற பொருள் ஒன்று உண்டு என்பதையும், உணவு துயில் முதலியவை மட்டும் மனிதனுக்குப் போதா என்பதையும் உணர்த்தினான்.

"கப்பல் கரை தட்டி வந்த காலத்தில் அந்தக் கப்பலிலுள்ள ஜனங்களைக் கொன்று தின்று வாழும் எங்களுக்கு இந்த உபதேசம் ஒன்றும் விளங்கவில்லையே!" என்று நாகர் தலைவன் சொன்னான்.

இனிமேல், நரமாமிச பக்ஷணம் செய்வதில்லை என்ற விரதத்தை மாத்திரம் அனுஷ்டியுங்கள். அதுவே போதும் என்று சாதுவன் உபதேசம் செய்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/69&oldid=1549162" இலிருந்து மீள்விக்கப்பட்டது