பக்கம்:புது மெருகு.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

புது மெருகு

"குற்றமே இல்லை; உன்னுடைய செய்யுள் பொருட் சிறப்பால் முதலில் நிற்கத்தக்கது. யோசிக்க வேண்டாம். என் பாடல் உன்னுடைய பாடலை அடுத்து நிற்கும் பெருமை பெற்றால் போதும்."

"என் மனம் துணியவில்லையே!"

"நான் உன்னுடைய ஆசிரியனென்ற எண்ணத் தினால்தானே இப்படிக் கலங்குகிறாய்?"

இந்தக் கேள்விக்குத் தேவர் பதில் சொல்லவில்லை.

"அந்த உரிமையை நான் ஒப்புக்கொண்டே கட்டளையிடுகிறேன். உன்னுடைய காவியத்திற்கு உன்னுடைய பாடலே முன் நிற்கட்டும். ஆசிரியன் கட்டளையை மறுக்கும் குற்றத்தைச் செய்யப் போகிறாயா?"

இதற்கு மேல் ஒன்றும் வழி தோன்றவில்லை. திருத்தக்கதேவரை ஆசிரியர் சிக்கவைத்துவிட்டார். அவர் வார்த்தையை மீறத் தேவர் துணியவில்லை. அவர் பாடலை இரண்டாவதாக வைத்துச் சீவக சரித் திரத்தைப் பாடத் தொடங்கினார்.

பேராற்று வெள்ளம்போலத் தேவருக்குச் செய் யுள் நடை அமைந்தது. கதையும் கம்பீரமானது. ஆகவே அவர் பாடிய சீவகசிந்தாமணி புலவர்களுக்குச் சிந்தாமணியாக விளங்குதற்கு ஏற்றதாயிற்று. சீவகன் பல மகளிரை மணம் புரிந்து இன்புற்ற செயல்களை யெல்லாம் காவிய இலக்கணங்கள் செறிந்து விளங் கும்படி தேவர் பாடினார். கடைசியில் முத்தி யிலம்பக மென்னும் பகுதியில் சீவகன் துறவு பூண்டு முக்தி பெற்றதாகக் கதையை அமைத்தார். அதில் ஜைன சமய உண்மைகளை விரிவாகச் சொன்னார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/77&oldid=1549183" இலிருந்து மீள்விக்கப்பட்டது