பக்கம்:புது மெருகு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவரும் குருவும்

73

காவியத்தை முடித்துவிட்டுக் கடைசியில் அருகக் கடவுள் துதியொன்றையும் பாடிச் சேர்த்து ஆசிரியப் பிரானிடம் கொண்டு போய்ப் படித்துக் காட்டினார். காவியத்தைத் கேட்கக் கேட்க ஆசிரியர் தம்மை மறந்தார். "தேவா, உன் பெயர் உலகுள்ளளவும் அழியாது" என்றும், "உன்னை மாணாக்கனாகப் பெற்றது என் பாக்கியம்" என்றும் அவர் வாயி லிருந்து அவரை அறியாமலே வார்த்தைகள் வந்தன.

இறுதிப் பாட்டைக் கேட்டு முடித்தார் குரு. தேவரை வாயார வாழ்த்தவேண்டுமென்று அவருக்குத் தோற்றியது. உள் உருகிவந்த அவர் வார்த்தைகள் செய்யுளாக அமைந்தன. "கடலிலே பிறந்த வலம்புரிச் சங்கில் தோற்றிய முத்துக்களையும் மாணிக்கத்தையும் கோத்து அமைத்த அழகிய வடம்போலே இருக்கிறது. இந்தச் சிந்தாமணியென்னும் காவியம். இதனை ஓதி உணர்ந்தவரும், கூறிக் கேட்டோரும் சுவர்க்க பதவி பெற்று இன்புற்றுப் பின்பு முத்தி பெறுவர்; இம்மை யிலும் திருமகள் திருவருளைப் பெறுவர்" என்ற பொருள் அமைந்த ஒரு செய்யுளால் குருநாதர் தேவரைப் பாராட்டினார்.

தேவர் நன்றியறிவிலே மூழ்கினார். அந்தச் செய் யுளையும் ஆசிரியர் கட்டளைப்படி சிந்தாமணியில் சேர்த்து அதற்குமேல் இரண்டு பாடல்களில் தமக்கு ஆசிரியர்பாலுள்ள நன்றியறிவைப் புலப்படுத்திக் காவியத்தை நிறைவேற்றினார்.

இங்ஙனம் ஆசிரியரது உள்ளத்தைக் கவர்ந்து நின்ற அக் காவியம் தமிழ்ப்புலவர் போற்றிப் பாது காக்கும் இலக்கியச் செல்வமாக விளங்கலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/78&oldid=1549185" இலிருந்து மீள்விக்கப்பட்டது