பக்கம்:புது மெருகு.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுஞ் சுவர்

87

தண்ணீர் போதாமல் மண்ணை வெட்டி அப்புவார். பொல பொலவென்று அப்படியே உதிர்ந்துவிடும். உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் போயிற்று. கைகள் கன்றிப் போயின. தொடர்ந்து ஒரே மூச்சாக வேலை செய்ய அவரால் முடியவில்லை. இடையிடையே சிறிது நேரம் உட்கார்ந்துகொண்டார்.

வெயில் ஏறிக்கொண்டு வந்தது. கம்பர் இன்னும் ஒரு படைகூட எழுப்பினபாடில்லை. "சுவர் வைக்கத் தெரியாத நாம், கவிதையினால் புதிய உலகைப் படைக்கிறோம். நம்முடைய கைகளால் எழுத்தாணி பிடிக்கத்தான் முடியும்; மண்வெட்டிக்கும் இவைகளுக்கும் வெகு தூரம்" என்ற விஷயம் அவருக்கு அப்பொழுது தான் புலப்படலாயிற்று.

மறுபடி எழுந்து முயன்றார். சிரமம் அதிகமாயிற்று. மீண்டும் உட்கார்ந்தார். அவர் உள்ளம் பிரயாணம் செய்யத் தொடங்கியது. சோழ மகாராஜனுடைய அரண்மனையில் அவருக்கு இருந்த செல்வாக்கு என்ன! அவருக்கு நடந்த உபசாரம் என்ன! இப்போது சுவர் வைக்க நேர்ந்த காலத்தின் கோலம் என்ன! நெற்றி வேர்வையை வழித்துக்கொண்டார். அப்போது ஏதோ பேருக்கு இரண்டு மண்வெட்டி மண் எடுத்து அப்பியிருந்தார்; அதுவும் படபடவென்று சரிந்துவிட்டது.

எழுந்து நின்று ஆத்திரத்தோடு ஐந்தாறு முறை மண்ணை வெட்டி வீசி ஒழுங்குபடுத்தினார். வழுக்கு மரத்தின்மேல் வெகு வேகமாக ஏறும் ஒருவன் அதே வேகத்தோடு சருக்கிவிட்டு இறங்குகிறானே, அதே போல அவ்வளவு மண்ணும் மடமடவென்று சரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/92&oldid=1549356" இலிருந்து மீள்விக்கப்பட்டது