பக்கம்:புது மெருகு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெடுஞ் சுவர்

89

பாடினார். அந்தச் சுவரையே முன்னிலைப் படுத்திப் பாடலானார்.

"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன்;
சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே!
விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி
நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே"

என்று வந்தது பாட்டு. சுவர் உண்மையில் குறுஞ் சுவர் தான். அவர் அதை நெடுஞ்சுவராக்கும் வேலையை ஒப்புக்கொண்டு வந்தார். அவர் கைகளுக்கு அந்தத் திறமை இல்லை. இப்போது அவர் நாவினால் அது நெடுஞ் சுவராகிவிட்டது. வேலியோ 'விற்கொண்ட வாள் நுதலாள்'(வில்லைப் போன்று வளைந்த ஒளியையுடைய நெற்றியைப் பெற்றவள்) ஆனாள்.

பாட்டு உணர்ச்சியோடு வந்தது. நெடுஞ்சுவரைப் பார்த்து அவர் பாடினார்; அதற்குக் காதா இருக்கிறது, கேட்க? ஆனால் விற்கொண்ட வாணுதலாளாகிய வேலியின் காதில் இது விழுந்தது.

'என்ன இது! இந்தக் கூலிக்காரன் பாட்டுப் பாடுகிறானே! இவன் வேலை செய்வதே விசித்திரமாக இருக்கிறதே!' என்று கவனித்தாள். 'நம்மைப் பாடுகிறானே; அடே! இதென்ன! இவன் வேலை செய்கிற தொழிலாளி அல்ல. யாரோ புலவர்' என்று எண்ணினாள். ஓடி வந்தாள். கம்பர் தம்மை மறந்து நெடுஞ்சுவரைப் பிரார்த்தித்துக்கொண் டிருந்தார். அவர்முன் போய் நின்று கைகுவித்தபடி, "புலவரே!" என்றாள் வேலி. கண்ணை விழித்தார் கம்பர். முன்னே வேலி நின்றாள். "ஐயா, நான் தாங்கள் சுவர் எடுப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். வேலை செய்த பழக்கம் தங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/94&oldid=1549397" இலிருந்து மீள்விக்கப்பட்டது