பக்கம்:புது வெளிச்சம்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சடப்பொருள்களாகிய இவ்வைந்தினையும் உயர்தினைப் பெயர்களாக்கி உருவங்களைச் செய்து கோவில்களைக் கட்டி அதில் வைத்து நம்மைக் கும்பிடச்செய்தனர்.

கடோபநிசத்துச் சூத்திரம் 6.9க்கு விளக்கம் தரவந்த உத்தரகீதை இப்படிச்சொல்வதை இதற்கு ஆதாரமாக கொள்ளலாம். துவிஜர்கள் (பிராமணர்கள்) பரமாத்மாவை அக்கினியில் பூசிக்கின்றனர். யோகிகள் தங்கள் இருதயத்தில் பூசிக்கின்றனர். அறிவில் முதிர்ச்சியடையாதவர்கள் (பாமரர்கள்) பிம்பங்களில் பூசிக்கின்றனர். சமதர்சிகள் எங்கும் புசிக்கின்றனர் என்கிறது.

இதிலிருந்து கோயில்கள், சமதர்சிகளுக்கும், யோகிகளுக்கும், பிராமணர்களுக்கும் அல்ல, பாமர மக்களுக்கு மட்டும் என்பதை மறுக்க முடியாது. எனவே சடப் பொருளை நோக்கிச் செய்யும் பிரார்த்தனை மட்டும் வீண் என்பதோடு; கோயிலும் வீண்; கும்பிடுதலும் வீண்; பூசை திருவிழாக்களும் வீண்; இதனைச் செய்யும் மனிதப் பிறப்பும் வீண் ஆகிறது என்று கொள்ளலாமல்லவா?

எனவே பிரம்மம், சிவன், விஷ்ணு, சூரியன், அம்பிகை, கணநாதன் எனும் இவைகள் அல்ல மற்றுமுள்ள எந்த ஒரு பெயர்ச்சொல்லுமல்ல எனின், பிரம்மம் என்பது எது என்று கூறவேண்டியது இங்கு அவசியம். அதை முண்டகோபநிசத்து சுட்டிக் கூறுகிறது.

“உடலுக்குள்ளேயே ஜோதி மயமாய்ப் பரிசுத்தமாய் விளங்கும் எந்த ஆத்மப் பொருளைச் சித்தமலம் நீங்கிய சந்நியாசிகள் காண்கிறார்களோ, அந்த ஆத்மப் பொருள் அகண்டமான பிரம்மமாச்சரியத்தாலும் தெளிந்த ஞானத்தாலும், இடைவிடாத தவத்தாலும் சத்தியத்தாலும் அடையப் பெறும்” என்கிறது.

மேலும் கூறுகிறது, “பொன்போன்று பிரகாசிக்கும் சிறந்த புத்திகோசத்தில் குற்றமற்றதும் பிளவு படாததுமான பிரம்மம் உள்ளது. அது சுத்தமாயும் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாயும் உள்ளது. அப்படியுள்ள அந்த ஆத்மாவை எவர்கள் அறிந்தவர்களோ அவர்களே அறிய வேண்டியதை அறிந்தவர்கள்” என்கிறது.

90

கவிஞர் வெள்ளியங்காட்டான்