பக்கம்:புதையலும் பேழையும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 157

பால் கொண்ட அத்தி

மருந்து மரத்தில் குத்தி, சீவி, சரித்து வெட்டக் கையாண்ட இரும்புக் கருவிகள் அம்மரச் சாற்றின் சுவையைக் காணும். மாறன் உடலில் புண்ணை உண்டாக்கிய வேலும் வாளும் அம்பும் முதலிய வற்றின் இரும்பு அவனது குருதிச் சுவை கண்டவை. அவ்வாறு இருப்புச் சுவை கண்ட விழுப்புண், நோய் தீர்ந்து ஆறி ஆறி வடுக்களாகக் காட்சியளித்தன. அப்புண்களை அவன் ஏற்றது ஒப்புரவு செய்வதற்காகவே. இவற்றோடு அவன் வடுக்களை நோக்குங்கால் அவை, அவன் உடலுக்கு அழகாகத் தோன்றின. இந்த நோக்கோடு மாறனைப் பார்த்தார், மதுரைப் புலவர் குமரனார் என்பார். திருவள்ளுவர் கூறிய, "மருந்தாகித் தப்பா மரம்' இப்புலவரது நினைவில் ஓடிவந்தது; பாடினார் :

"இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய்தீர்ந்து மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன், கொடையெதிர்ந்து ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்” !

- - என்று பாராட்டினார்.

ஒரு தோழி பேசினாள் :

என் தலைவியது பாட்டன், தந்தை, தமையன், மாமன் மைத்துனன், தனயன் முதலிய உறவினரது உடல்களைப்பார். போர்ப்புண்களில் வடுப்பெற்றவர் அவர்;

'பால்கொண்ட அத்தியெனவே உடல்வடுப்பட்ட எமர்'

- என்று அவளைப் பேச வைத்தார் துறைமங்கலம் சிவப்பிரகாசர்.

பொதுவாக மருந்து கொள்ளப்பட்ட மரத்தை உவமையாகக் காட்டியதை முன்னே கண்டோம். இங்கு, சிறப்பாக அத்திமரத் தைக் குறித்து - அதனினும் குத்தியெடுத்த பாலைக் குறித்து - காய்ந்த வடுவைக் குறித்து விளக்கமாக்கி உவமை காட்டியதைக் காண்கிறோம்.

1. புறம் : 180 : 4 - 7. 2 திருவெங்கைக் கோவை : 99.