பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 99

"உழவர்கள் நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். வியாபாரிகள். ஊதியத்தைக் கருதி கடலைக் கடந்து சென்று செல்வம் திரட்டுகிறார்கள். குடியானவர் மீண்டும் மீண்டும் விதைத்துப் பயிரிடுகிறார்கள். மழையும் அடிக்கடி பெய்து கொண்டேயிருக்கிறது. மீண்டும் மீண்டும் தானியங்கள் விளைந்துகொண்டேயிருக்கின்றன. பிச்சைக்காரர் மீண்டும் மீண்டும் பிச்சை கேட்டுக்கொண்டே யிருக்கிறார்கள். தனவந்தர் மீண்டும் மீண்டும் தானம் கொடுக்கிறார்கள். ஊக்கமும் அறிவும் முயற்சியும் உள்ளவர்கள் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறாரோ அந்தக் குடும்பத்தை ஏழு தலைமுறைக்கு அவர் புகழை யுண்டாக்குகிறார்.

"பகவரே! தாங்கள் எல்லோரிலும் பெரியவர். இம்மையிலும் மறுமையிலும் நன்மை தர வல்லவர். மக்களின் பாவச் செயல்களைத் தடுத்து நன்மைகளை மேற்கொள்ளச் செய்யும் ஆற்றல் படைத்தவர். தங்கள் தந்தையாகிய சுத்தோதன அரசரும் சாக்கிய ஜனங்களும் தங்களைக் காணும்படி எழுந்தருள வேண்டும்" என்று பலவாறு வேண்டினார்.

கபிலபுரம் செல்லல்

உதாயி தேரரின் வேண்டுகோளுக்கு இணங்கி பகவன் புத்தர் கபிலவத்து நகரம் போகப் புறப்பட்டார். அர்கந்தர்களுடன் புறப்பட்டு, இடைவழியிலே கூடுகிற மக்களுக்குத் தர்மோபதேசம் செய்துகொண்டே ஒருநாளைக்கு ஒரு யோசனை தூரம் நடந்து சென்றார். இரண்டு திங்கள் நடந்து வைசாக பெளர்ணமை நாளிலே கபிலவத்து நகரத்தை யடைந்தார். உதாயிதேரர் முன்னதாகச் சென்று இவர் வருகையைச் சுத்தோதன அரசருக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்தார். அவர்கள் இவர் வரவை எதிர்பார்த்து, இவர் தங்குவதற்காக நிக்ரோத ஆராமம் என்னும் தோட்டத்தை அழகுபடுத்தி வைத்தார்கள்.

பகவன் புத்தர் நகரத்திற்கு வந்தபோது மலர் முதலியவற்றை எடுத்துக்கொண்டு நகர மக்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். அவர்கள் சிறுமிகளை முதலில் அனுப்பினார்கள். அவர்களுக்குப் பிறகு அரசகுமாரர்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள். பகவன் புத்தர் கணக்கற்ற அர்ஹந்தரோடு நிக்ரோத ஆராமத்தில் சென்று தங்கினார். ஆனால் இயற்கையிலே இறுமாப்புள்ள அரசகுலத்தில் பிறந்த சாக்கியர்கள், 'சித்தார்த்த குமாரன் வயதிலே நமக்கு இளையவன்; நமக்கு மருகனாவுள்ளவன்; பேரனாகவுள்ளவன்' என்று நினைத்துத்