பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 101

சொல்லிக்கொண்டு ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே யிருந்தார்கள். யசோதரை தேவியார், பகவன்புத்தர் பிக்ஷைக்குப் போகிறதை கேள்விப்பட்டுச் சிங்கபஞ்சரத்தைத் திறந்து பார்த்தார். அப்போது அவர் தமக்குள் இவ்வாறு எண்ணினார். “என்னுடைய கணவர், முன்பு இந்நகரத்தில் உலாவச் சென்றபோது பொற்றேரில் அமர்ந்து அறுபத்துநான்கு விதமான ஆபரணங்களை அணிந்து மாணிக்கங்களினாலே ஒளிவிடுகிற கிரீடத்தை அணிந்து, ஒரு லக்ஷம் பொன். விலையுள்ள முத்துமாலைகளை மார்பிலே தரித்து இந்திரன்போலச் சென்றார். இப்போது தலைமுடியையும் தாடி மீசைகளையும் மழித்துப் போட்டு அரையிலும் தோளிலும் காவியாடையணிந்து ஒரு பாத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கால்நடையாகப் பிக்ஷைக்கு வருகிறாராம். இந்தக்கோலம் அவருக்கு உசிதமானதா என்பதைப் பார்ப்போம்" என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பகவன் புத்தர் அவ்வழியே வர அவருடைய திருமேனியிலிருந்து ஆறு நிறமுள்ள புத்த ஒளி வீசியதைக் கண்டு யசோதரை தேவியார் வியப்படைந்தார். அப்போது பகவன் புத்தருடைய திருமேனியின் அழகைப் பற்றிக் கேசாதிபாதமாக (தலைமுதல் பாதம்வரையில்) வர்ணனை செய்து எட்டுப் பாடல்களைத் தம்மை யறியாமலே பாடினார். பிறகு. ஓடோடிச் சென்று, தமது மாமனாரான சுத்தோதன அரசரிடம்போய், "தங்களுடைய குமாரர் தெருவழியே பிக்ஷை எடுத்துக்கொண்டு போகிறார்" என்று தெரிவித்தார்.

இதைக்கேட்ட அரசர் திடுக்கிட்டெழுந்து விரைந்து சென்று பகவன் புத்தர் முன்னிலையில் நின்று, "சுவாமி! நமக்கு ஏன் வெட்கத்தை உண்டாக்குகிறீர். எதற்காக பிக்ஷை ஏற்கிறீர். பிக்ஷுக்களுக்கு அரண்மனையில் ஆகாரம் கொடுக்க முடியாது என்று ஜனங்களுக்குத் தெரிவிக்கிறீர்களா?" என்று கேட்டார்.

அப்போது பகவன் புத்தர், "மகாராசரே! இது நமது பரம்பரை வழக்கம்" என்று விடை கூறினார்.

இதைக் கேட்டு வியப்படைந்த சுத்தோதன அரசர், "சுவாமி! நமது பரம்பரை என்றால், மகாசம்பிரத க்ஷத்திரிய ராஜவம்சம். இதில் பிக்ஷைக்குப் போன அரசர் ஒருவரும் இருந்ததில்லை" என்று கூறினார்.