பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 / புத்தரின் வரலாறு

வேண்டுகோளுக்கு இணங்க பகவன் புத்தர் வைசாலிக்குச் சென்றார். சென்றவுடனே கொள்ளை நோய்நீங்கிற்று. நோயாளிகள் நலன் அடைந்தார்கள். பிறகு பகவன் புத்தர் அங்கு அரதன சூத்திரத்தை ஓதி உபதேசம் செய்தார். பெருந்தொகையானவர் பௌத்தரானார்கள். பிறகு பசுவர் வெளுவனத்திற்கு திரும்பிவந்தார்.

போரை நிறுத்தியது

அக்காலத்தில் சாக்கியருக்குங் கோளியருக்கும்பகை ஏற்பட்டுப் போர் செய்யத் தொடங்கினார்கள். நாட்டில் மழை பெய்யாமல் வற்கடம் ஏற்பட்டது. இரண்டு நாட்டாருக்கும் இடையே ஓடி வயல்களுக்கு நீர் கொடுத்த உரோகிணி ஆற்றில் நீர் குறைந்தது. நிலங்களுக்கு நீரைப் பாய்ச்சுவதில் ஏற்பட்டதுஇந்தப் பகையும் போரும். இரு நாட்டாரும் போருக்கு ஆயத்தமாக நின்றபோது, பகவன் புத்தர் தமது ஞானக் கண்ணினால் இந்நிகழ்ச்சியையறிந்து, போர்க்களத்தின் இடையே இருதரத்தாருக்கும் நடுவில் ஆகாயத்திலே நின்று, அறிவுரை நிகழ்த்தினார். அதனைக் கேட்ட இருதரத்தாரும் போரை நிறுத்தினார்கள். அன்றியும் உபதேசங் கேட்டுப் பௌத்தரானார்கள்.

சுத்தோதனர் மோக்ஷம்

சில காலஞ் சென்ற பிறகு சுத்தோதன அரசர் நோய்வாய்ப்பட்ட செய்தி அறிந்து பகவன் புத்தர் சில பிக்குகளுடன் புறப்பட்டுத் தமது இருத்தியினாலே ஆகாயத்தில் பறந்து சென்று நோயாய்க்கிடந்த அரசருக்கு நிலையாமை என்பது பற்றி அறவுரை வழங்கினார். அதனைக் கேட்ட அரசர் அர்ஹந்த நிலையடைந்து புத்தரைத் தொழுது நிர்வாண மோக்ஷம் அடைந்தார்.

சுத்தோதன அரசர் இறந்த பிறகு, பகவன் புத்தரின் இளைய தாயாரான பிரஜா கௌதமி தேவியார், துறவு கொள்ள விரும்பினார். அவர் ஆலவனத்தில் தங்கியிருந்த பகவரிடம் வந்து தமக்குச் சந்நியாசம் கொடுத்து பிக்குணியாக்கும்படி கேட்டுக்கொண்டார். மகளிரை பௌத்தப் பிக்ஷு சஙக்த்தில் சேர்க்க விருப்பம் இல்லாதபடியால் பகவர். அவருக்குக் சந்நியாசம் கொடுக்க மறுத்து வைசாலி நகரத்திற்குப் போய்விட்டார்.